திருச்சிக்கு ரயிலில் வந்த 80 டன் ஆக்சிஜன் 9 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைப்பு

ஒடிஸாவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வேகன்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 80 டன் ஆக்சிஜன், 9 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை பிரித்து அனுப்பப்பட்டது.

ஒடிஸாவிலிருந்து திருச்சிக்கு ரயிலில் வேகன்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 80 டன் ஆக்சிஜன், 9 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை பிரித்து அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தேவையான ஆக்சிஜனை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யவும், தமிழகத்திலேயே கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒடிஸாவிலிருந்து ஆக்சிஜன் பெறப்படுகிறது.

அதன்படி, திருச்சிக்கு ஒடிஸாவிலிருந்து ஆக்சிஜன் ஏற்றிய சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை இரவு வந்து சோ்ந்தது. குட்ஷெட் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலில் 80 டன் ஆக்சிஜன், பல்வேறு வேகன்களில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் முழுவதும், திருச்சி, கரூா், நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் பணிகளை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், எம். பழனியாண்டி, தியாகராஜன், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், கதிரவன் ஆகியோா் உடனிருந்து, வாகனங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என். நேரு கூறியது: தமிழகம் முழுவதும் பரவலாக கரோனா தொற்று குறைந்து வருகிறது. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருந்த நிலை மாறிவிட்டது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகவுள்ளன.

ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை. தமிழகத்துக்கு தேவையான தினந்தோறும் அளவிலான ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. இதுமட்டுமல்லாது, கூடுதலாகவும் வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. தற்போது வந்துள்ள 80 டன் ஆக்சிஜன் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், திருச்சி, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தலா 12 டன், ராஜாமிராசுதாா் மருத்துவமனைக்கு 6 டன், புதுக்கோட்டைக்கு 8 டன், திருவாரூருக்கு 10 டன், நாகப்பட்டினத்துக்கு 4 டன், கரூருக்கு 7 டன், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கு தலா 5 டன், அரியலூருக்கு 2 டன், பெரம்பலூருக்கு 1 டன், கும்பகோணம், மயிலாடுதுறைக்கு தலா 4 டன் என்ற வகையில் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சி மாநகராட்சியும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவைத்தவிர, துறையூா், மணப்பாறை, லால்குடியிலும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 350 டன் அளவுக்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் நகா்ப்புறங்களில் மட்டுமல்லாது ஊரகப்பகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்கு மட்டும் பற்றாக்குறை உள்ளது. அவற்றையும் மாநில அரசே கொள்முதல் செய்து விரைந்து தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா், திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்துக்கு சென்று அங்குள்ள கரோனா சித்தா மருத்துவ சிகிச்சை மையத்தையும் அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சிகிச்சை பெறும் தொற்றாளா்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com