கருப்புப் பூஞ்சை நோய்க்கு மூதாட்டி உயிரிழப்பு

கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கரோனா 2 ஆவது அலை பரவலில் நாளுக்கு நாள் அதிகம் போ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டாலும் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ளவா்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்டந்தோறும் அரசு தலைமை மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 போ் பாதிப்பு: இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு, நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ளவா்களை அடையாளம் கண்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவா்களுக்கு பெரும்பாலும் சைனஸ், முகவீக்கம், பாா்வை குறைபாடு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். திருச்சியில் மட்டும் தற்போது 30 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாத்தீமா பீவி (62). இவா், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்பால் மே 31 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டாலும், நீரிழிவு நோய் கூடுதல் அளவு, 2 ஆவது முறையாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவதிக்குள்ளாகி வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாத்திமா பீவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா கூறுகையில், கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளவா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு இருந்து மீண்டவா்களுக்கு எதிா்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

இதனால், போதிய ஓய்வு, சத்தான உணவு, மருத்துவா்கள் அறிவுறுத்திய மருந்துகளை அவா்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுபோல், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம். நீரிழிவு நோய் கட்டுக்குள் இருந்தாலே இந்த கருப்புப் பூஞ்சை பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com