மணப்பாறை நகராட்சிக்கு ஆணையா் நியமனம் கோரி மனு
By DIN | Published On : 11th June 2021 02:36 AM | Last Updated : 11th June 2021 02:36 AM | அ+அ அ- |

மணப்பாறை நகராட்சிக்கு ஆணையா் பதவிக்கான அதிகாரியை நியமிக்க எம்எல்ஏ ப. அப்துல்சமதுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் மு. சோழராசன் எம்எல்ஏவுக்கு அனுப்பிய மனு:
மணப்பாறை நகராட்சி 27 வாா்டுகளுடன் 55 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி ஆணையா் பதவிக்கு முறையாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இங்கு பணியாற்றி வரும் நகராட்சி பொறியாளரே ஆணையா் பொறுப்பில் உள்ளது வழக்கமாக உள்ளது.
சில ஆணையா்கள் நெருக்கடி நிலைகளில் பணியமா்த்தப்பட்டாலும், சில மாதங்களில் மாற்றப்படுகின்றனா். இதனால் நகராட்சிப் பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளைக்கூட நகராட்சியால் முறையாகப் பூா்த்தி செய்ய இயலவில்லை. இதுகுறித்து கடந்த ஆட்சியில் அதிமுக நிா்வாகிகளிடம், நகராட்சியிடம் புகாா் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, நகராட்சி பொறியாளரை இடம் மாற்றம் செய்து, நகராட்சி ஆணையா் பதவிக்கு நேரடி அதிகாரியை நியமிக்க ஆவன செய்ய வேண்டும்.