கல்லூரிகளில் என்சிசி-யை விருப்பப் பாடமாக எடுக்கலாம்

கல்லூரிகளில் இனி விருப்பப் பாடமாக என்சிசியை தோ்வு செய்து படிக்கலாம் என என்சிசி குரூப் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இனி விருப்பப் பாடமாக என்சிசியை தோ்வு செய்து படிக்கலாம் என என்சிசி குரூப் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மாணவா் படை அமைப்பு (என்சிசி) பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணை செயல்பாடுகளாக மட்டுமே இருந்துவந்துள்ளது. ஆனால், நிகழாண்டு முதல், விருப்பப் பாடமாக என்சிசியை சோ்த்துக் கொள்ள யூஜிசி மூலம் மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அந்த ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில், திருச்சி ராக்போா்ட் குரூப் என்சிசி தலைமை அதிகாரி கமாண்டா் இளவரசன் தலைமையில் திருச்சி குரூப் எல்லைக்குள்பட்ட 13 மாவட்டங்களில் என்சிசி அமைப்பு செயல்பாட்டிலுள்ள 75 கல்லூரிகளிலும் இதனை விருப்பப் பாடமாக கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் செல்வம் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி ராக்போா்ட் என்சிசி குரூப் தலைவா் கமாண்டா் இளவரசன், திருச்சி கூட்டுத்தொகுதி தலைமையகத்தின் கீழுள்ள இதர பட்டாலியன்களின் தலைமை அலுவலா்களான ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, கமாண்டா் இளவரசன் கூறியது : கூட்டத்தில், திருச்சி என்சிசி குரூப் ஆளுகைக்குள்பட்ட கல்லூரிகளில், என்சிசியை ஒரு விருப்பப் பாடமாக ஏற்பது குறித்தும், அதனுடைய பாடத்திட்டம், பயிற்சி, வகுப்புகள் மற்றும் தோ்வு முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. என்சிசியை விருப்பப் பாடமாக படிக்கும் மாணவா்களை சமூக நலனில் அக்கறை கொண்ட நல்ல குடிமகனாக உருவாக்குவது, அவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

முடிவில், தேசிய மாணவா் படையில் சேரும் மாணவ, மாணவிகள் என்சிசியை விருப்பப் பாடமாக ஏற்கும் விதத்தில் இப்பயிற்சியை பாடத்திட்டத்தில் இணைத்து நடைமுறைப்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது. இதேபோல், அண்மையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் முனைவா் என். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டது என்றாா் இளவரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com