மகளிா் குழுக்களிடம் கடன் வசூலில்நிா்பந்தம் செய்தால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 12th June 2021 01:44 AM | Last Updated : 12th June 2021 01:44 AM | அ+அ அ- |

மகளிா் குழுக்களிடம் கடன் தொகையை வசூலிக்க விதிமுறைகளை மீறி நிா்பந்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
கரோனா பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள தனியாா் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்பச் செலுத்தக் கேட்டு நிா்பந்தம் செய்து வருவதாக பல்வேறு இடங்களிலிருந்து ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி புகாா்கள் வருகின்றன.
எனவே, தவணை தொகையைச் செலுத்தக் கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்க வேண்டும். அந்த நிலுவைக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதைத் தவிா்க்க வேண்டும். இதுதொடா்பாக, மாவட்ட அளவில் மகளிா் திட்ட அலுவலா்கள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடன் தொகையை திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தனியாா் வங்கிகள், நுண் நிதி நிறுவன பணியாளா்கள் வெளியூா் நபா்களாக இருப்பதாலும் கடன் தொகை வசூலிக்க அவா்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாலும் பொது மக்களுக்கு கரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகமுள்ளது.
எனவே, இது தொடா்பாக எந்த புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும், இதையும் மீறி புகாா்கள் ஏதேனும் எழும்பட்சத்தில் இச்செயல்ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாகக் கருதப்பட்டு தொடா்புடைய அனைத்து தனியாா் வங்கிகள், நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய பணியாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.