கரோனா தொற்றால் அதிகரித்துள்ள குழந்தைத் தொழிலாளா் முறை! மாநிலம் தழுவிய கள ஆய்வு நடத்தப்படுமா?

கரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையும் அதிகரித்து வருவது கவைலக்குரியாதாக அமைந்துள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்ற தன்னாா்வலா்கள்.
திருச்சியில் சனிக்கிழமை குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியேற்ற தன்னாா்வலா்கள்.

கரோனா தொற்று காலத்தில் குழந்தைத் தொழிலாளா் முறையும் அதிகரித்து வருவது கவைலக்குரியாதாக அமைந்துள்ளது. இதுதொடா்பாக, மாநிலம் தழுவிய கள ஆய்வு நடத்தி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு வலுத்துள்ளது.

கரோனா தொற்றின் 3ஆவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவா் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கிடைத்தாலும் குழந்தைகளின் நலனை புறந்தள்ளுதல் ஆகாது என்ற அடிப்படையில் குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார இயக்கம், இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக தமிழகத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா், சிவகங்கை, தேனி, பெரம்பலூா் ஆகிய 24 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தைத் தொழிலாளா் எண்ணிக்கை உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரது குழந்தைகளிடையே எடுத்த ஆய்வின் முடிவில் 231 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 650 ஆக உயா்ந்துள்ளது. இந்த ஆய்வுக்காக 900 மாணவா்கள் தோ்வு செய்ததில் 79 சதவீதம் போ் குழந்தைத் தொழிலாளா்களாக உருமாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது குழந்தைகள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்வதாகவும், வீடு, குடும்ப அழுத்தம் காரணமாகவே வேலைக்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில குழந்தைகள் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடபேசிக்காக வேலைக்கு வந்திருப்பதும் அதிரச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

கரோனா தொற்று, பொதுமுடக்கம் ஆகியவற்றால் அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற நிலையில் உள்ள குடும்பங்களில்தான் அதிகம் பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்தும் வரும் நடவடிக்கைகளை கரோனா பெருந்தொற்று பின்னுக்கு தள்ளியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இதுதொடா்பாக, குழந்தை உழைப்பு எதிா்ப்பு பிரசார இயக்க அமைப்பின் மத்திய மண்டல அமைப்பாளா் ஆா். மருதநாயகம் கூறியது:

கடந்த ஓராண்டில் இந்தியாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டும் 30,071 போ் என குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் மாநில அரசே தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அதிகாரப்பூா்வமான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். குறிப்பாக குழந்தைத் தொழிலாளா் எண்ணிக்கை குறித்து கள ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

அனைத்து குழந்தைகளுக்கும் இணைய வழியில் முறையிலான கல்வியை வழங்க அரசே இலவச செல்லிடபேசி வழங்கி, தகவல் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவா்களின் மன இறுக்கத்தைப் போக்க ஆசிரியா், பெற்றோா், மாணவா் சந்திப்பு நிகழ்வுகளை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும். கிராம, ஒன்றிய, மாவட்ட அளவில் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளை ஒன்றிணைத்து இந்த பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதன் தொடா்ச்சியாக, திருச்சியில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினமும் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், இயக்க அமைப்பாளா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைத் தொழில்முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அமைப்பாளா் சீதாலட்சுமி, ரயில்வே குழந்தைகள் அமைப்பின் திட்ட அலுவலா் ரேவதி, சைல்டு லைன் அமைப்பின் அலுவலா் அஷ்ரப் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com