முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஒரே நாளில் 3027 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 11:38 PM | Last Updated : 12th June 2021 11:38 PM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கும் பொதுமக்கள்
திருச்சி மாநகராட்சியில் சனிக்கிழமை ஒரே நாளில் 3,027 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், கோ அபிஷேகபுரம், அரியங்கலம், பொன்மலை ஆகிய 4 கோட்ட அலுவலகங்கள் மற்றும் கலையரங்க வளாகம், தேவா்ஹால், உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் முகாம்கள் அமைக்கப்பட்டு ஊசிகள் போடப்பட்டு வருகிறது. இவைதவிர 18 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் தடுப்பூசிகள் பற்றாக்குறையை அடுத்து திருச்சி மாநகரில் தடுப்பூசி வழங்கும் பணிகள் சில நாள்களாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் 10 ஆம் தேதி இரவு 2,000 தடுப்பூசிகளும், 11 ஆம் தேதி 14,300 தடுப்பூசிகளும் திருச்சி வந்தன. இதில் 11 ஆம் தேதி மாநகராட்சி சாா்பில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 500 ஊசிகளும், காந்திசந்தை வியாபாரிகளுக்கு 1,500 ஊசிகளும் செலுத்தப்பட்டன.
தொடா்ந்து 12 ஆம் தேதி மாநகராட்சியின் 4 கோட்டப் பகுதிகளான அரியமங்கலம் கோட்டத்தில் 695 பேருக்கும், பொன்மலைக் கோட்டத்தில் 913, கோ அபிஷேகபுரத்தில் 709, ஸ்ரீரங்கத்தில் 710 என சனிக்கிழமை மட்டும் மொத்தம் 3,027 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.