இந்து மக்கள் கட்சியினா் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 22nd June 2021 12:33 AM | Last Updated : 22nd June 2021 12:33 AM | அ+அ அ- |

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகா் சந்நிதி முன்பு திங்கள்கிழமை சூடம் ஏற்றி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.
திருச்சி: கோயில்களைத் திறக்க கோரி, திருச்சியில் இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு தளா்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
மது அருந்துவோா் வசதிக்காக மதுக்கடைகளைத் திறந்ததை கண்டித்தும், பக்தா்களின் வழிபாட்டுக்காக அனைத்து கோயில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகா் சந்நிதி முன்பு இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது 1 கிலோ கற்பூரத்தை ஏற்றி வழிபாடு நடத்தினா். தொடா்ந்து கோயில்களைத் திறக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மாரி முன்னிலை வகித்தாா். ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.