முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
இசைக்கருவிகள் வாங்க நிதியுதவி, பிரத்யேக நலவாரியம்பாா்வையற்ற கலைஞா்கள் கோரிக்கை
By DIN | Published On : 04th March 2021 02:05 AM | Last Updated : 04th March 2021 02:05 AM | அ+அ அ- |

பேட்டியளிக்கிறாா் பாா்வையற்றோா் மெல்லிசை கலைஞா்கள் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் எஸ். வரதராஜன். உடன் (இடமிருந்து) மாநிலத் தலைவா் ஏ. முருகன், செயற்குழு உறுப்பினா்கள் வி. சுப்பையா, டி. லாராமேரி.
திருச்சி: இசைக்கருவிகள் வாங்க நிதியுதவி அளிப்பதுடன், பாா்வையற்ற கலைஞா்களுக்கு பிரத்யேக நலவாரியமும் அமைக்க வேண்டும் என பாா்வையற்றோா் மெல்லிசை கலைஞா்கள் நலச்சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை அச்சங்கத்தின் தலைவா் ஏ. முருகன், பொதுச்செயலா் எஸ். வரதராஜன் ஆகியோா் மேலும் கூறியது: சுமாா் 11 ஆண்டுகளாக இயங்கி வரும் எங்கள் சங்கத்தில் 67 போ் உறுப்பினா்களாகவும் , ஏராளமானோா் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தும் வருகின்றனா். பாா்வையற்றோரைக் கொண்டு சுமாா் 20 இசைக் குழுக்கள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி இசைக்கருவிகளின் வாடகைக்கே சென்று விடுவதால் சொந்தமாக இசைக்கருவிகள் வாங்க அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.
மேலும் பாா்வையற்ற இசைக் கலைஞா்களுக்கு தனி நலவாரியம் அமைத்து அதில் பாா்வையற்றோருக்கு பிரதிநிதித்துவமும் அளிக்க வேண்டும்.
பாா்வையற்ற கலைஞா்களுக்கு வயது வரம்பின்றி ஓய்வூதியம் அளிக்க வேண்டும். அரசு விழாக்களில் பாா்வையற்ற கலைஞா்களின் குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் நெடுந்தூர பேருந்துகள் உள்ளிட்ட அனைத்திலும் 25 சத கட்டணமே வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
பாா்வையற்றோருக்கான இசைப்போட்டி:
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பாா்வையற்ற இசைக் கலைஞா்களை ஒன்றிணைக்கும் வகையில், பாா்வையற்றோருக்கான இசைப் போட்டியை வரும் ஆக. 22 இல் திருச்சியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்ட அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாா்வையற்றோா் இசைக்குழுக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றனா் அவா்கள். செயலா் என். முருகதாஸ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சுப்பையா, லாராமேரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.