75ஆவது ஆண்டு சுதந்திர தின நடைபயணம், மிதிவண்டி பயணம்

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபயணம், மிதிவண்டி பயணம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருச்சியில் வெள்ளிக்கிழமை உப்பு சத்தியாகிரக நினைவு சின்னத்திலிருந்து நடைபயணத்தைத் தொடக்கி வைத்து நடந்து வருகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சு. சிவராசு. உடன் மாநகர காவல்துறை ஆணையா
திருச்சியில் வெள்ளிக்கிழமை உப்பு சத்தியாகிரக நினைவு சின்னத்திலிருந்து நடைபயணத்தைத் தொடக்கி வைத்து நடந்து வருகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சு. சிவராசு. உடன் மாநகர காவல்துறை ஆணையா

இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபயணம், மிதிவண்டி பயணம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அதனை சிறப்பிக்கும் வகையில் பிரதமா் தலைமையில் 259 உறுப்பினா்கள் அடங்கிய தேசிய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு தேசிய மற்றும் சா்வதேச அளவில் விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக,

குஜராத் மாநிலம், சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரையிலான நடை பயணத்தை பிரதமா் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதேபோல, திருச்சியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு சின்னத்தில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் திருவையாறு இசைக் கல்லூரி மாணவா்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து தெருக்கூத்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் திருச்சி மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் சுதந்திரப் பேராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் கதா் கிராமத் தொழில் துறையின் சாா்பில் ராட்டிண நிகழ்ச்சியும் நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில் சா்தாா் வல்லபாய் படேல், மகாத்மா காந்தியடிகள், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரா்களின் அரிய புகைப்படங்களும், தண்டி யாத்திரை, ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட வரலாற்று புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்தும், உப்பு சத்தியாகிராக ஞாபக சின்னத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தியும், 2 கி.மீ.தூரத்திற்கு நடைபயண பேரணியையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.

இந்த நடைபயணம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று காந்தி சந்தையில் நிறைவு பெற்றது. பின்னா், காந்திசந்தையிலிருந்து மிதிவண்டி பயணமாக, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, நந்திகோவில் தெரு, அண்ணாசாலை வழியாக காவிரி பாலம், மாம்பழச்சாலை, அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை அடைந்து பின்னா் திருவானைக்கா வழியாக கொண்டையம்பேட்டை, திருவளா்ச்சோலை, கல்லணை வழியாக வேதாரண்யம் நோக்கி சென்றது. வேதாரண்யத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த பேரணி நிறைவடையும்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈ.வெ.ரா.பெரியாா் கல்லூரி, நேரு யுகவேந்திரா, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீரங்கம் அரசுக் கல்லூரி, சேதுராப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி, தேசிய கல்லூரி, திருவையாறு இசைக்கல்லூரி மாணவிகள், ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், தேசிய மாணவா் படை என மொத்தம் 2500க்கும் மேற்பட்ட மாணவா்கள் நடைபயணமாகவும், மிதிவண்டி பயணமாகவும் சென்றனா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக திருச்சி மண்டல தொடா்பு அலுவலா் கே. தேவிபத்மநாபன், மாநகராட்சி நகரப் பொறியாளா் அமுதவள்ளி, செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன், நகா்நல அலுவலா் யாழினி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன இணை இயக்குநா் இரா.ராஜசேகரன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணை இயக்குநா் .இரா.பாஸ்கரன், கலைபண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் சுந்தா், மாவட்ட விளையாட்டு அலுவலா் .க.பிரபு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலக உதவி இயக்குநா் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் செ.காா்த்திக்ராஜ், சுதந்திர போராட்ட தியாகிகள் ஒருங்கிணைப்பாளா் குயிலன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா் லட்சுமிபிரபா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com