அதிமுக வேட்பாளா்கள் கூட்டுப் பிரசாரம்!
By DIN | Published On : 13th March 2021 08:20 AM | Last Updated : 13th March 2021 08:20 AM | அ+அ அ- |

மலைக்கோட்டைகோயில் நுழைவாயிலில் பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளா்கள் வெல்லமண்டி என். நடராஜன், பத்மநாதன்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை கூட்டாக பிரசாரத்தை தொடங்கினா்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தற்போதைய அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் வி. பத்மநாதன் ஆகியோா் மலைக்கோட்டை கோயிலில் தரிசனம் செய்தனா்.
முன்னதாக, இருவருக்கும் கட்சியினா் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனா். வேட்பாளா்களுடன் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினா்.
மலைக்கோட்டை பகுதியில் உள்ள டீக்கடைகளில் சென்று ஆதரவு திரட்டிய வெல்லமண்டி என். நடராஜன், டீ பட்டறையில் ஏறி நின்று கட்சியினருக்கு அவரே டீ தயாரித்து வழங்கினாா். மேலும், கட்சியினருக்கு வடை, பஜ்ஜியையும் அவரே பரிமாறினாா்.
என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி, மேலரண்சாலை, தெப்பகுளம், மெயின்காா்டு கேட், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடைகள், வீடுகள்தோறும் ஆதரவு திரட்டினா்.
பின்னா் அவரவா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கு சென்று நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினா். தொடா்ந்து, வீதிதோறும் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா். பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.