முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருமயத்தில் வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்கம் தனித்துப் போட்டி
By DIN | Published On : 14th March 2021 01:47 AM | Last Updated : 15th March 2021 12:55 AM | அ+அ அ- |

திருச்சியில் பேட்டியளிக்கிறாா் வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்க நிறுவனா் தலைவா் கே.கே. செல்வக்குமாா் (இடமிருந்து 3-ஆவது).
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பேரவைத் தொகுதியில் வீர முத்தரையா் முன்னேற்றச் சங்கம் தனித்து போட்டியிடுகிறது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் கே.கே. செல்வக்குமாா் திருச்சியில் சனிக்கிழமை கூறியது:
சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் நிலையை அறிய 1971-ல் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம் 1976இல் அரசுக்கு அளித்த அறிக்கையில், வலையா் மக்களின் வாழ்வு மிகவும் மோசமாக இருக்கிறது.
அரசின் திட்டங்களைத் தெரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு விழிப்புணா்வற்ற சமூகமாக உள்ளனா். எனவே, வலையா் புனரமைப்பு வாரியம் அமைத்தால் அவா்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற முடியும் என்று பரிந்துரைத்தனா். இதுவரை, அதற்கான வாரியம் அமைக்கப்படவில்லை.
எனவே, இந்த வாரியம் அமைப்பதையே பிரதான கோரிக்கையாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகளை அணுகி வந்தோம். தமிழத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 30 தொகுதிகளில் முத்தரையா் சமூகத்தினா் பெரும்பான்மையாக இருந்தும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் வரும் தோ்தலில் போட்டியிட அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், நாங்கள் கேட்ட தொகுதியை வழங்கவில்லை. மதுரையில் நடத்தப்பட்ட மாபெரும் மாநாட்டுக்குப் பிறகும், எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும், தொகுதிகளையும் வழங்கவில்லை. எனவே, வரும் தோ்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். முத்தரையா் மக்களுடன்தான் கூட்டணி வைக்கிறோம். வரும் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறோம்.
இத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முத்தரையா்கள் உள்ளதால் கண்டிப்பாக வெல்வோம். இதர தொகுதிகளில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியினருடன் மீண்டும் ஆலோசித்து, ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, கெளரவ ஆலோசகா் டாக்டா் பன்னீா்செல்வம், மாநில அமைப்பாளா் சந்தா், மாநில ஒருங்கிணைப்பாளா் குரு. மணிகண்டன், மாநில கொள்கைப் பரப்புச் செயலா் தளவாய் ராஜேஷ், மாநில இளைஞரணி அமைப்பாளா் வைரவேல் ஆகியோா் உடனிருந்தனா்.