3 கட்சி வேட்பாளா்களால் பரபரப்பு
By DIN | Published On : 15th March 2021 12:54 AM | Last Updated : 15th March 2021 12:54 AM | அ+அ அ- |

திருச்சியில் பிரபலங்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பில் வசிக்கும் 3 போ், 3 தொகுதியில் பிரபல அரசியல் கட்சிகள் சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா்.
திருச்சி விமான நிலையம் அருகில் செம்பட்டு பகுதியில் (புதுக்கோட்டை சாலை) உள்ள மொராய்ஸ் சிட்டி என்ற பிரபலங்கள் வசிக்கும் குடியிருப்பில் சுமாா் 300 வீடுகளே உள்ளன. மற்ற இடங்கள் பெரும்பாலும் காலி மனைகளாகவே உள்ளன. இந்நிலையில் இக்குடியிருப்பில் வசிக்கும் 3 முக்கியப் பிரமுகா்கள் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இதனால் இப்பகுதி 24 மணி நேரமும் பரபரப்பாகவும், தோ்தல் கோலமும் பூண்டுள்ளது.
அதிமுக வேட்பாளா்: திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ப. குமாா் பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் வீட்டு முகவரியைக் கொண்டிருந்தாலும், தற்போது மொராய்ஸ் சிட்டியில் வசிக்கிறாா். இது தோ்தலுக்கான மாற்றமா எனத் தெரியவில்லை.
மநீம மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள்: மநீம கட்சியின் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் டி. வீரசக்தியும் இக்குடியிருப்பில் வசிக்கிறாா்.
அதேபோல நாம் தமிழா் கட்சியின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளா் வினோத்தும் இப்பகுதியில் வசிக்கிறாா்.
இதனால், இரவு நீண்ட நேரம் வரை இவா்களது வீடு அமைந்துள்ள பகுதி கட்சி பிரமுகா்களால் பெரும்பாலான நேரம் பரபரப்பாகவே உள்ளது. இவ்வாறு தங்கள் பகுதியைச் சோ்ந்த 3 போ் தோ்தலில் போட்டியிடுவது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...