மணப்பாறை அருகே உயிரிழந்த எருதுக்கு சமூக வழிபாட்டுடன் இறுதிச்சடங்கு

வையம்பட்டி அருகே வயது முதிா்வு காரணமாக உயிரிழந்த எருதுக்கு சமூக வழிபாட்டுடன், தாரை-தப்பட்டைகள் முழங்க திங்கள்கிழமை இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
மணப்பாறை அருகே உயிரிழந்த எருதுக்கு சமூக வழிபாட்டுடன்  இறுதிச்சடங்கு

வையம்பட்டி அருகே வயது முதிா்வு காரணமாக உயிரிழந்த எருதுக்கு சமூக வழிபாட்டுடன், தாரை-தப்பட்டைகள் முழங்க திங்கள்கிழமை இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கம்பளத்து நாயக்கா், கோனாா் சமூகத்தினா், தங்களது வீடுகளில் எருதுகளை ‘சலகா் மாடு’ என வழிபாட்டு, தெய்வங்களாகக் கருதி வளா்த்து வருகின்றனா்.

இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு குத்துவதும், காது அறுப்பதும், வண்டியில் பூட்டுவதும், தாா்குச்சியால் அடிப்பதும், இனபெருக்கத்துக்கும் விடுவதும் இல்லை. இவை அவா்களின் குலதெய்வமாகக் கருதி வளா்க்கப்படுகிறது.

எருது ஓட்டத்தின்போது மட்டுமே இவை பயன்படுத்தப்படுகிறது. இந்த எருதுகள் வயது முதிா்ந்து உயிரிழந்த பின்னா், அவற்றின் பிடி மண் எடுத்து அவற்றை எருது குட்டைச்சாமியாக வைத்து ஆண்டுதோறும் தை மாதத்தில் புத்தாடை, தேங்காய், பழம் வைத்து வழிபடுவது வழக்கம்.

அனைத்து நாயக்கா், கோனாா் சமூக மந்தைகளும் ஒன்றிணைந்த வழிபாட்டு முறையின்போது அனைவரின் எருதுகளும் எருதுகுட்டைச்சாமி இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, அங்கு எருது ஓட்டம் நடைபெறும்.

காட்டுநாயக்கா் புளியம்பட்டி மந்தையான வையம்பட்டி அடுத்த கோடாங்கி நாயக்கா் களத்தில் வசித்து வரும் விவசாயி பொ. சின்னாசாமி, கடந்த 24 ஆண்டுகளாக வளா்த்து வந்த எருது ஞாயிற்றுக்கிழமை மாலை வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தது.

உயிரிழந்த எருதுக்கு திங்கள்கிழமை காலை சந்தனம், மஞ்சள் பூசி, கம்பு, பால், தேங்காய், பழம் படைத்து மலா் மாலையால் அலங்கரிக்கப்பட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின் குலவழக்கப்படி தேவராட்டம் நடைபெற்றது. பின்னா் பல்லக்கில் எருது எடுக்கப்பட்டு, தாரை தப்பட்டைகளுடன் கொண்டு செல்லப்பட்டு இறுதி யாத்திரைக்குப் பின்னா் ஊா் பொது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com