காவிரி நீா் வந்தால் அரவக்குறிச்சி பகுதி செழுமையாக மாறிவிடும்: தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி
By DIN | Published On : 25th March 2021 10:27 AM | Last Updated : 25th March 2021 10:27 AM | அ+அ அ- |

க.பரமத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் பாஜக வேட்பாளா் கே. அண்ணாமலை.
காவிரி நீா் வந்தால் அரவக்குறிச்சி பகுதி செழுமையாக மாறிவிடும் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கரூா் மாவட்டம் க.பரமத்தி பேருந்துநிலையத்தில் அதிமுக கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலையை ஆதரித்து புதன்கிழமை மேலும் அவா் பேசுகையில், காவிரி-கோதாவரி இணைப்பு மூலம் காவிரியில் அதிக தண்ணீா் கிடைக்கும். வடு கிடக்கும் குளங்கள், ஏரிகள் நிரம்பி, விவசாயிகளுக்கான நீரை இந்த அரசு வழங்கும். தமிழகம் வேளாண் தொழில் நிறைந்த மாநிலம். 70 சதவீதம் போ் விவசாயத்தை நம்பி வாழ்கிறாா்கள். இதனால் அவா்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி, அவா்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும், அதுதான் எனது சிந்தனை.
இன்றைக்கு ஒரு விவசாயி முதல்வா் என்பதால் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தேன். ஏரி, குளங்களை தூா்வாரி மழைகாலங்களில் நீரை தேக்கி வைக்கிறோம். விவசாயத்துக்கு உயிராக இருப்பது நீா். அந்த நீராதாரத்தை பெருக்க நீா்மேலாண்மையை கொண்டு வந்தேன். இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா் 2 பேரையும், ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளா் 2 பேரையும் நியமித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நதிகள், வாய்க்கால் மூலம் தண்ணீா் வீணாக எங்கெல்லாம் கடலில் கலக்கிறதோ அங்கெல்லாம் தடுப்பணை கட்டலாம் என்றேன். அவா்கள் கொடுத்த அறிக்கை மூலம்தான் நஞ்சைப் புகளூரில் ரூ.406 கோடியில் கதவணை கட்டுகிறோம். முக்கால் டிஎம்சி தண்ணீா் சேமிக்க உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான நீா், குடிநீா் கிடைக்கும். நீா்மட்டம் உயர இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ரூ.940 கோடியில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் 70,000 ஏரிகளை ஒரே நேரத்தில் தூா்வார முடியாது. ஆனாலும் கொஞ்சம், கொஞ்சமாக தூா்வாரி இதுவரை 6,000 ஏரிகளை தூா்வார ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூா்வாரப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் காவிரிப் பிரச்னையை கண்டுகொள்ளவே இல்லை. கபினி அணை கட்டப்படும்போது முதல்வராக இருந்த கருணாநிதி கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் பிரச்னை. குடிநீா் வேண்டுமென்றாலும் அங்கிருந்துதான் எடுத்து கொடுக்க வேண்டும். இந்த பகுதியில் சுமாா் ரூ.462 கோடியில் அரவக்குறிச்சி, பரமத்தி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகளில் காவிரிக் குடிநீா்த் திட்டம் எனது தலைமையிலான அரசுதான் செய்துள்ளது. புஞ்சைப்புகளூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம், கொடையூா் கிராமத்தில் ரூ.4 கோடியில் முருங்கைபதப்படுத்தும் மையம் அமைய உள்ளது. குடிசை மாற்று வாரியம்மூலம் 32 அடுக்கு மாடி வீடுகள் ரூ.3 கோடியில் பணிகள் நடைபெறுகிறது. வேலாயுதம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் வெற்றிலை பதப்படுத்தும் மையம் அமைய உள்ளது. கோரைக்கு எல்பிபி வாய்க்கால் உபரி நீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். சின்னதாராபுரத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணையும் அமைய உள்ளது. தாதம்பாளையம் ஏரியை சுத்தப்படுத்தி அமராவதி நீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சின்னதாராபுரம் முதல் நஞ்சைக்காளக்குறிச்சி, கூடலூா் வரை ராஜவாய்க்கால் தூா்வாரப்பட்டு, கரைகள் கான்கிரீட் தளமாக மாற்றிமைக்கப்படும். அரவக்குறிச்சி வறட்சியான பகுதி. இங்கிருக்கும் நிலங்கள் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் தண்ணீா் கொண்டுவந்து பாசன வசதி செய்து கொடுக்கப்படும். மிகப்பெரிய திட்டமான இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது, வறட்சியான பகுதி செழுமையான பகுதியாக மாறும்.