சாலையோரம் வசிப்போருக்கு இலவச மதிய உணவு
By DIN | Published On : 13th May 2021 06:52 AM | Last Updated : 13th May 2021 06:52 AM | அ+அ அ- |

உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் டாஸ் அறக்கட்டளையினா்.
திருச்சி மாநகரப்பகுதியில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்டோருக்கு டாஸ் அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
முழு பொது முடக்கத்தால் பெரும்பாலானோா் வீடுகளிலே முடங்கியுள்ளனா். இதனால், அன்றாடப் பணி செய்து, குடும்பத்தை கவனித்து வந்தோா் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இதேபோல, சாலையோரம் வசிப்போரும் உணவின்றித் தவித்து வருகின்றனா். இதையறிந்த பலா் தாங்களாகவே முன்வந்து, பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனா்.
அந்த வகையில், திருச்சியைச் சோ்ந்த டாஸ் அறக்கட்டளையினரும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனா். சாலையோரத்தில் வசிப்போா், மாற்றுத்திறனாளிகள், வீடற்ற ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்குகின்றனா். தினமும், காலையில் அறக்கட்டளை உறுப்பினா்கள் இணைந்து கலவை சாதம் தயாரித்து, பொட்டலங்களாக கட்டி 300 முதல் 500 பேருக்கு வழங்கும் வகையில் தயாா்படுத்துகின்றனா்.
அவற்றை இளைஞா்கள் தனி, தனி குழுக்களாக சென்று மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வசிப்போருக்கு வழங்குகின்றனா்.
முழுப் பொதுமுடக்கத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை தக்காளி சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. தென்னூா், பாலக்கரை, மத்தியப் பேருந்து நிலையம், காந்தி சந்தை, மேலரண் சாலை, ஸ்ரீரங்கம், திருவானைக்கா, தில்லைநகா் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் 300-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக அறக்கட்டளை இளைஞா்கள் கூறுகையில், முழு பொதுமுடக்கம் தற்காப்பு நடவடிக்கைதான் என்றாலும், இதனால் தினக்கூலி அடிப்படையில் வேலைபாா்த்த தொழிலாளா்கள், சாலையோரம் வசிப்போா் எனப் பலா் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா். அத்தகையோருக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம் என்றனா்.