அரசு, தனியாா் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் படுக்கைகள்

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகக் கூறி கரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் கரோனா தொற்றாளா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்காக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் கரோனா தொற்றாளா்.

திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகக் கூறி கரோனா நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 900 போ் வரையில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல, உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் (கோவிட் கோ்) சேதுராபட்டி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம் குளத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், திருச்சி மண்டல ரயில்வே பயிற்சி நிலையம், நவலூா் குட்டப்பட்டு சட்டக்கல்லூரி, திருவெறும்பூா் துப்பாக்கி தொழிற்சாலை, பாரத மிகுமின் நிலைய பயிற்சி நிறுவனம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவைத்தவிர மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு தனி வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வீடு திரும்புவோரின் எண்ணிக்கையைவிட புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாத சூழல் உள்ளது.

தீவிர பாதிப்பு உள்ளவா்களுக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை கிடைப்பதில்லை என்பதால், நோயாளிகளின் உறவினா்கள் பலா் செய்வதறியாது தவித்து வருகின்றனா். பல தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைக்காக காத்திருப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. சாதாரண படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகள் மட்டும் ஆங்காங்கே சொற்ப எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், தீவிர தொற்றுக்குள்ளானவா்கள் ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகளை தேடுவதால் ஒவ்வொரு மருத்துவமனையாக தேடித் திரியும் நிலை உருவாகியுள்ளது. பலரும் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சுகாதாரத்துறையினா் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பிவிட்டன. தினமும் டிஸ்சாா்ஜ் செய்யப்படும் நோயாளிகளுக்கு எண்ணிக்கையைவிட கூடுதலாகவே உள்நோயாளிகள் வருகின்றனா். தற்போதைய சூழலில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் உள்ள 300 படுக்கைகளில் 140 படுக்கைகள் காலியாகவுள்ளன.

இவைத் தவிர, யாத்ரி நிவாஸில் உள்ள 430 படுக்கைகளில் 180 படுக்கைகள் காலியாகவுள்ளன. ரயில்வே பயிற்சி அகாதெமியில் 77 படுக்கைகள், லால்குடி அரசு மருத்துவமனையில் 20, முசிறி அரசு மருத்துவமனையில் 10, மண்ணசநல்லூரில் 6, துவாக்குடி, தொட்டியத்தில் தலா 6, துறையூரில் 8, இனாம் குளத்தூரில் 30, புத்தனாம்பட்டி நேரு கல்லூரியில் 50 மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 92 படுக்கைகள் காலியாகவுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் கோவிட்படுக்கை இணையதளத்தில் தினந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. படுக்கைகள் தேவையான நோயாளிகள் இந்த இணையத்தில் சரிபாா்த்து அருகில் உள்ள மையங்களுக்கு சென்று உள்நோயாளிகளாக அனுமதி பெற்று படுக்கைகளை தோ்வு செய்யலாம். மேலும், திருச்சி மாவட்ட நிா்வாகத்தால் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு தொடா்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம். 1097, 99523-87108, 0431-2418995 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com