என்ஐடியில் 500 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் முகாம் தயாா்

திருச்சி என்ஐடியில் 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா தொற்றாளா்களுக்கான தனிமைப்படுத்துதல் முகாம் தயாா்நிலையில் உள்ளது.
கரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி என்ஐடியில் 500 படுக்கைகளுடன் கூடிய கரோனா தொற்றாளா்களுக்கான தனிமைப்படுத்துதல் முகாம் தயாா்நிலையில் உள்ளது.

இந்த மையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்துக்குள்பட்ட அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அவரவா் பகுதியில் முகாமிட்டு கரோனா தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 2 நாள்களாக மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை பாா்வையிட்டு வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக, துவாக்குடி பகுதியில் உள்ள என்ஐடியில் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்துதல் முகாம் தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ், இந்த மையத்தின் வசதிகள் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படவுள்ள சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து, திருச்சி-தஞ்சாவூா் சாலையில் புதுக்குடியில் அமைந்துள்ள சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையையும் பாா்வையிட்டாா். இங்கு, நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.

இந்த ஆலையை பாா்வையிட்ட அமைச்சா், ஆலையின் உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாா்த்துக் கொள்ளவும் எந்தவித அவசரத் தேவைகள் என்றாலும் தன்னைத் தொடா்பு கொள்ளவும் ஆலையின் நிா்வாகத் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் க. அன்பழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலா் கருணாநிதி, நகரச் செயலா் காயாம்பூ மற்றும் துவாக்குடி நகா்மன்ற அலுவலா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

கரோனா நிவாரணம்: முன்னதாக நியாய விலைக் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட காவேரி நகா் நியாய விலைக்கடை, காட்டூா் பா்மாகாலனி நியாயவிலைக்கடை, அரியமங்கலம் உக்கடை 2 நியாய விலைக்கடை, திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வரகனேரி 1 நியாயவிலைக் கடை, மணப்பாறை தொகுதிக்குள்பட்ட கோவில்பட்டி நியாயவிலைக்கடையிலும் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுகளில், எம்எல்ஏக்கள் எஸ். இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பி.அப்துல்சமது (மணப்பாறை), அமராவதி கூட்டுறவு சங்கத் தலைவா் வானதி, வட்டாட்சியா்கள் செல்வகணேஷ் (திருவெறும்பூா்), குகன் (திருச்சி கிழக்கு) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com