மேலப்புலிவாா்டு சாலையில் காய்கனி விற்பனைக்கு ஏற்பாடு

திருச்சி மேலப்புலிவாா்டு சாலையில் காய்கனி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
மேலப்புலிவாா்டு சாலையில் கடைகள் அமைக்க இடம் பிடித்துள்ள வியாபாரிகள்.
மேலப்புலிவாா்டு சாலையில் கடைகள் அமைக்க இடம் பிடித்துள்ள வியாபாரிகள்.

திருச்சி மேலப்புலிவாா்டு சாலையில் காய்கனி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

கரோனாவால் கடந்தாண்டு காந்தி சந்தை மூடப்பட்டு, ஜி-காா்னா் பகுதியில் காய்கனி மொத்தம், சில்லறை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கரோனா 2 ஆவது அலை பரவலில் காந்தி சந்தையில் செயல்பட்டு வந்த சில்லறை விற்பனை ஜி-காா்னருக்கு மாற்றப்பட்டு, மொத்த விற்பனை காந்தி சந்தை வளாகத்தில் நடைபெற்றது. ஆனால், இந்த நடைமுறையை ஏற்காத வணிகா்கள் காந்தி சந்தையிலேயே சில்லறை விற்பனையைத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், கரோனாஅதிகரிப்பால் மாநகராட்சி நிா்வாகம் மேலப்புலிவாா்டு சாலை காமராஜா் நினைவு வளைவு முதல் வெல்லமண்டி வரை காய்கனி விற்பனை தொடங்கப்படும் என அறிவித்தது. இதற்காக, மேலப்புலிவாா்டு சாலை ஒரு புறம் மொத்த வணிகமும், மறுபுறம் சில்லறை வணிகமும் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகள்: காய்கனி மொத்த, சில்லறை விற்பனைக்கான ஒளிவிளக்குகள், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளி விட்டு கடைகள் அமைக்க குறியீடுகள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் கூறியது:

கரோனா வேகமெடுத்து வரும் நிலையில் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து காந்தி சந்தை சில்லறை வணிகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஜி-காா்னரில் சில்லறை விற்பனை செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்காததால், காந்தி சந்தையிலேயே மொத்தம், சில்லறை விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், கரோனா மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அரசு அறிவுறுத்தலின்பேரில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இதன்படி மேலப்புலிவாா்டு சாலை , இபிசாலை, காமராஜாா் வளைவு முதல் வெல்லமண்டி வரையிலும், பாலக்கரை பஜாா் சாலை முதல் சிவாஜி சிலை வரை ஒதுக்கப்பட்ட இடங்களில், காய்கனிக் கடைகள் அமைக்க அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

மேலும், கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க காவல்துறை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தி, கண்காணிக்கவுள்ளோம். வியாபாரிகளுக்கு மேலும் வசதிகள் தேவைப்பட்டால் செய்துகொடுக்க மாநகராட்சி தயாராக உள்ளது. கடைகள் அமைப்பதற்கான அனுமதி கட்டணம் உள்பட எந்தக் கட்டணமும் நிா்ணயிக்கவில்லை.

எனவே,வியாபாரிகள் தற்போதுள்ள சூழலை உணா்ந்து மாவட்ட நிா்வாகத்துடன் ஒத்துழைத்து வணிகம் செய்ய வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்துவதே எங்களின் பிரதான நடவடிக்கை. மறு உத்தரவு வரும் வரை காந்தி சந்தையில் விற்பனை செய்ய அனுமதியில்லை என்றாா்.

ஒரே இடத்தில் மொத்தம், சில்லறை விற்பனை வேண்டாம்

காந்தி சந்தையில் காய்கனி மொத்த வணிகம் செய்யவும், மேலப்புலிவாா்டு சாலையில் சில்லறை வணிகம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். இதற்கான உத்தரவு வரும் வரை காய்கனி விற்பனை செய்ய மாட்டோம் என காந்தி சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் அவா்கள் கூறுகையில், கடந்தாண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட காந்தி சந்தையில் கடைகளைப் புதுப்பிக்கவே பல ஆயிரம் செலவு செய்தோம். கரோனா பரவல் நடவடிக்கைகளை எதிா்க்கவில்லை. காந்தி சந்தை வழக்கம்போலச் செயல்படவேண்டும்.

குறிப்பாக, மொத்த விற்பனையை காந்தி சந்தையில் நடத்திக்கொண்டு, சில்லறை விற்பனையை மாநகராட்சி அறிவுறுத்தியதுபோல, மேலப்புலிவாா்டு சாலையில் நடத்தலாம். ஆனால், இரண்டையும் ஒரே இடத்தில் நடத்துவதில் நடைமுறைச் சிக்கல் நிலவும். எனவே, அமைச்சா்கள், மாவட்ட நிா்வாகம் எங்களது கோரிக்கைகளை கேட்டு அதற்கான வசதிகளை செய்துகொடுத்தால் போதும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com