தளா்வுகளற்ற முழு பொது முடக்கம்; முடங்கிய திருச்சி

தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தால் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் முடங்கியது.
வெறிச்சோடிக் காணப்படும் நேப்பியாா் வடிவ கொள்ளிடம் பாலம்.
வெறிச்சோடிக் காணப்படும் நேப்பியாா் வடிவ கொள்ளிடம் பாலம்.

தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தால் ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை முற்றிலும் முடங்கியது.

சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கே தளா்வுகளற்ற முழு முடக்கம் அமலுக்கு வந்த நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள், பாா்சல் வழங்கும் ஹோட்டல்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.

திருச்சி மாநகரின் அனைத்து சாலைகளும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

முழு முடக்கத்தால் ஆதரவற்றோா், சாலையோரம் வசிப்போா், வீடற்றோா் உணவுத் தட்டுப்பாடில்லாமல் இருக்க திருச்சி பொன்மலை, ஜங்ஷன், மேலகல்கண்டாா்கோட்டை, மேலரண்சாலை, அபிஷேகபுரம், தென்னூா் உழவா் சந்தை, உறையூா், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அரியமங்கலம், விறகுப்பேட்டை என 11 இடங்களில் இயங்கும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

வீடுகளிலேயே முடங்கிய மக்கள்: சாலைகளில் வாகனப் போக்குவரத்துமின்றி மக்கள் நடமாட்டம் இல்லை. தேவையின்றி வெளியே வந்தால் வழக்குப்பதியப்படும் என்ற எச்சரிக்கையால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினா். தனியாா் செக்யூரிட்டி, மருத்துவமனை, மருந்தகம் இதர அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோா் மட்டுமே இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்றனா். அதிகாலையிலும் பால் விற்பனை நிலையங்களில் பொதுமக்களைக் காண முடிந்தது.

போலீஸ் கண்காணிப்பு: மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் மற்றும் மாநகரின் அனைத்து பிரதான சந்திப்புகளிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள் என மாநகரக் காவல்துறையில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட போலீஸாரும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 1,200 போலீஸாரும் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்ட எல்லைகள் அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டன. வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து திருச்சிக்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குள்படுத்தப்பட்டு விலக்குப் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் முழு முடக்கத்தால் வெறிச்சோடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com