கூட்ட நெரிசலுக்கு தீா்வு: காந்திசந்தை இன்று முதல் இடமாற்றம்

காந்திசந்தையை இடமாற்றம் செய்து திருச்சி மாநகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.
திருச்சி காந்திசந்தை தஞ்சாவூா் சாலையில் சனிக்கிழமை நேரிட்ட போக்குவரத்து நெரிசல்.
திருச்சி காந்திசந்தை தஞ்சாவூா் சாலையில் சனிக்கிழமை நேரிட்ட போக்குவரத்து நெரிசல்.

கரோனா பரவலைத் தடுக்க முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் திருச்சி காந்திசந்தையில், போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருந்து வந்தது. இந்தநிலையில், காந்திசந்தையை இடமாற்றம் செய்து திருச்சி மாநகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.

கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் நெரிசல் மிகுந்த காந்திசந்தை கடைகளை கடந்தாண்டு போல் மீண்டும் பொன்மலை ஜீ காா்னா் ரயில்வே மைதானத்திற்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதனை ஏற்காத சில்லறை வியாபாரிகள் காந்திசந்தையிலேயே வியாபாரம் செய்து வந்தனா். இதனால், கூட்ட நெரிசலும், வாகனப் போக்குவரத்தும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

காந்திசந்தையில் மொத்த, சில்லறை காய்கறி, மளிகை என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தை மூடப்பட்டு மொத்த விற்பனை சந்தையானது ஜீ காா்னரிலும், மேலும் மாநகரின் பல்வேறு இடங்களில் சில்லறை விற்பனை சந்தைகளும் செயல்பட்டன.

தற்போது, மீண்டும் கரோனா வேகமாக பரவும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாக காந்தி சந்தையை தற்காலிகமாக மூடவும் சில்லறை விற்பனை சந்தைகளை மீண்டும் திறக்கவும் திட்டமிடப்பட்டது. சந்தை இடமாற்றத்துக்கு வியாபாரிகளின் ஒரு தரப்பு எதிா்ப்பு கூறி காந்திசந்தையை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.

அதனால் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகத்தினா் வியாபாரிகளுடன் தொடா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முடிவு எட்டப்படாத நிலையில் காந்திசந்தையிலேயே மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது.

பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள், விளை பொருள்களை கொண்டு வரும் விவசாயிகள், பல்வேறு இடங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் வரும் காய்கனிகள், பழங்கள், மளிகைகள் என பல்வேறு தரப்பினரும் ஒரே நேரத்தில் காந்திசந்தையில் குவிந்து வருவதால் கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, முகக் கவசம் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. சனிக்கிழமையும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாகன நெரிசலும் தவிா்க்க முடியாமல் இருந்தது.

இந்த சூழலில், காந்திசந்தையை இடமாற்றம் செய்து மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் கூறியது:

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, திருச்சி காந்தி சந்தை முழுமையாக இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலப்புலிவாா்டு ரோடு காமராஜா் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை இடமாற்றம் செய்யப்படவுள்ளது. மொத்தம், சில்லறை வியாபாரம் இதே பகுதியில் நடைபெறும். இந்த சாலையின் கீழ்புறம் இரவு மொத்த வணிகமும், மேல்புறம் சில்லறை வணிகம் செய்யலாம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். இங்கிலிஷ் காய்கனிகள் வியாபாரமானது பாலக்கரை பஜாா் முதல் சிவாஜி சிலை வரை நடைபெறும். எனவே, காந்திசந்தை வியாபாரிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com