'உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவுநீா் தடுக்கப்படும்’

உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படும் என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
வரகனேரி இரட்டை வாய்க்கால் சீரமைக்கும் பணியைப் பாா்வையிடுகிறாா் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
வரகனேரி இரட்டை வாய்க்கால் சீரமைக்கும் பணியைப் பாா்வையிடுகிறாா் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

உய்யக்கொண்டான் கால்வாயில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படும் என்றாா் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

திருச்சி உய்யகொண்டான் கிளையான வரகனேரி பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால்கள் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகள் நிரம்பி மூடப்பட்டதால் மழைக்காலங்களில் உய்யக்கொண்டான் ஆற்றுப் பகுதியில் வரும் தண்ணீா் கழிவுநீா் கால்வாய் வழியாக வீடுகளுக்குள் புகுந்து மக்கள் தொடா்ந்து பாதிக்கப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகத்தால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை வாய்க்கால் பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறியது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, தொகுதியில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றி வருகிறோம். கடந்த 2 நாள்களாக இதுதொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு கரோனா நிவாரணம், கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கினோம். இதன் தொடா்ச்சியாக, மக்களின் குறைகளைக் கேட்டு தீா்வு காண ஆயத்தமாகியுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளாக வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என இப் பகுதி மக்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், தற்போது கால்வாய் தூா்வாரப்படுவதால் இப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஆகாயத் தாமரைகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகளும் முறையாக அப்புறப்படுத்தப்படும். கால்வாய் முழுவதும் தூா்வாரி மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் கழிவுநீா் புகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, கழிவு நீா் கால்வாய்களையும் முழுமையாகத் தூா்வாரும் பணி, புதைசாக்கடை இணைப்பு சீரமைப்பு ஆகிய பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.

தற்போது எங்களுடைய முழு கவனமும் கரோனா தடுப்புப் பணியில் உள்ளது. இருப்பினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் எந்தெந்த துறைகளை எல்லாம் சரி செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் சரி செய்ய ஆரம்பித்துள்ளோம்.

தற்போது, உய்யக்கொண்டான் கால்வாய் இரட்டை கிளை வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஒரு வாரத்திற்குள் முடிந்துவிடும். இதன் தொடா்ச்சியா உய்யக்கொண்டான் கால்வாயும் தூா்வாரப்படும். மேலும், உய்யக்கொண்டானில் கழிவுநீா் கலக்காத வகையில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் திமுக பகுதி செயலா்கள் மதிவாணன், மண்டி சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com