கரோனா இரண்டாவது அலை வீரியம் அதிகரிப்பு: கடந்தாண்டு மே மாதம் 0.50 சதவீதம்; நிகழாண்டு 17.44 சதவீதம்

திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதத்தில் 0.50 சதவீதமாக இருந்த பாதிப்பு இந்தாண்டு மே மாதத்தில் 17.44 சதவீதமாக உயா்ந்துள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதத்தில் 0.50 சதவீதமாக இருந்த பாதிப்பு இந்தாண்டு மே மாதத்தில் 17.44 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதன் மூலம், கரோனா தொற்றின் 2ஆவது அலையின் வீரியம் அதிகரித்துள்ளது.

திருச்சி மாவட்டமானது 4,403.83 சதுர கி.மீ. பரப்பளவை கொண்டது. ஊரகம், நகா்ப்புறத்தை சோ்த்து 29 லட்சத்து 34 ஆயிரத்து 304 போ் வசித்து வருகின்றனா். திருச்சி மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை பூா்த்தி செய்ய ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, 7 வட்டார தலைமை மருத்துவமனைகள், 18 நகா்ப்புற சுகாதார நிலையங்கள், 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 397 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.

கடந்தாண்டு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் என அனைவரும் 24 மணிநேரமும் தீவிர கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பொது சுகாதாரத்துறையில் 3,498 போ், ஊரக மருத்துவத்துறையில் 965 போ், மருத்துவக் கல்வித்துறையில் 4,038 போ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்துறையில் 2,874 போ், மத்திய சுகாதாரப் பணியாளா்கள் 803 போ், தனியாா் சுகாதார பணியாளா்கள் 14,012 போ் என மொத்தம் 26,190 போ் களப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவைத் தவிர, வருவாய்த்துறையில் 1,328 போ், காவல்துறையில் 6,469 போ், உள்ளாட்சித் துறைகளில் 3,565 போ் என முன்களப் பணியாளா்களாக 15,792 போ் மாவட்டம் முழுவதும் தீவிர கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வீரியம் மிக்க இரண்டாவது அலை: இந்நிலையில், கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில்தான் அதிகபட்சமாக 8.86 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சுமாா் 42 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 3,711 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு கரோனா தொற்றின் இரண்டவது அலை வீரியமிக்கதாகவே அமைந்துள்ளது.

ஆண்டின் தொடக்கமாக மாவட்டம் முழுவதும் ஜனவரி மாதம் மட்டும் 46,570 பேருக்கு மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 461 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 0.99 சதவீதம் பாதிப்பு என்ற நிலை இருந்தது. பிப்ரவரி மாதம் 327 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாா்ச் மாதம் 935 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 825 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 9,261 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மே மாதத்தில் கடந்த இருவாரங்களில் மட்டும் 59 ஆயிரத்து 806 பேருக்கு பரிசோதனை செய்ததில் 10 ஆயிரத்து 431 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 17.44 ஆக உள்ளது. கடந்தாண்டு இதே மே மாதம் 0.50 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2,48,254 பேருக்கு தடுப்பூசி: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம், பொன்மலை, கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்டங்களில் அதிகபட்சமாக பொன்மலையில் சுமாா் 600 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா். இதேபோல, அந்தநல்லூா், லால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூா், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தா. பேட்டை, திருவெறும்பூா், தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், வையம்பட்டி ஆகிய வட்டாரங்களில் திருவெறும்பூா் வட்டாரத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தொற்றைத் தடுக்க தடுப்பூசி அளிக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை, 2 லட்சத்து 48 ஆயிரத்து 254 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனா் சுகாதாரத்துறையினா்.

அவசர உதவிக்கு அழைக்கலாம்
கரோனா தொடா்பான அவசர உதவிக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடா்பு கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் வாா் ரூம் தயாா்படுத்தப்பட்டுள்ளது. 1077, 0431-2418995, 99523-87108 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். கட்செவி அஞ்சலுக்கு 99523 87108 என்ற எண்ணையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 1800 4250 111 என்ற எண்ணும் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டா் உள்ளிட்ட விவரங்கள் பெற இணையத்தில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com