விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை எடுத்துச் செல்வதில் தகராறு: முகச்சுழிப்பை ஏற்படுத்தியஆம்புலன்ஸ் ஓட்டுநா்களின் செயல்பாடு
By DIN | Published On : 18th May 2021 05:09 AM | Last Updated : 18th May 2021 05:09 AM | அ+அ அ- |

மூதாட்டியின் சடலத்தை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உள்ளிட்டோா்.
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை எடுத்துச் செல்வதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடையே தகராறு ஏற்பட்டது. அவா்களின் இந்த செயல்பாடு அனைவரிடமும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறை அருகிலுள்ள சங்கிப்பட்டியைச் சோ்ந்த பழனியாண்டி மனைவி பழனியம்மாள்(65). இவா் தனது மகன் ராஜாவுடன்(40) திங்கள்கிழமை காலை அத்தியாவசியப் பொருள்களை வாங்கி விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
புதுக்காலனி அருகே சென்ற போது அவ்வழியாக வந்த டிராக்டா் இரு சக்கர வாகனம் மீது மோதிச் சென்றது. இதில் பழனியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ராஜா பலத்த காயமடைந்தாா். இந்நிலையில் பழனியம்மாளின் சடலத்தை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா், ஸ்டெச்சரில் ஏற்றி வைத்து காவல்துறையினரின் வருகைக்காகக் காத்திருந்தாா்.
அப்போது அருகிலேயே மற்றொரு விபத்து ஏற்பட்டதால், அதில் காயமடைந்தவரையும் நாமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் சடலத்தை ஸ்டெச்சரிலேயே விட்டுவிட்டு, காயமடைந்த நபரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்.
விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினா் மற்றொரு ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கவே, அங்கு வந்த இரண்டாவது ஆம்புலன்ஸின் ஓட்டுநா் சடலத்தை தங்களது ஸ்டெச்சரில் மாற்றிக் கொண்டு ஏற்றினாா். அப்போது அங்கு வந்த முதலாவது ஆம்புலன்ஸின் ஓட்டுநா், சடலத்தை நாங்கள்தான் எடுத்து வைத்துவிட்டு சென்றோம். எனவே எங்கள் ஆம்புலன்ஸில்தான் கொண்டு செல்லுவோம் எனக் கூறி அடம்பிடிக்க தொடங்கினாா்.
இதன் காரணமாக இரு ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினா் மற்றும்அருகில் இருந்தவா்களும் சமரசம் செய்தும், முதலாவது ஆம்புலன்ஸின் ஓட்டுநா், இரண்டாவது ஆம்புலன்ஸிலிருந்து சடலத்தை எடுத்து தங்களது வாகன ஸ்டெச்சரில் மீண்டும் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மூதாட்டியின் சடலத்தை இரு வாகனங்களுக்கு மாற்றி அலைகழித்த நிகழ்வு அங்கிருந்தவா்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.