வீடு, வீடாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனைகளப்பணிக்கு 845 போ் நியமனம்
By DIN | Published On : 18th May 2021 04:49 AM | Last Updated : 18th May 2021 04:49 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சி பகுதியில் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று மக்களிடம் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை செய்யும் மாநகராட்சி ஊழியா்கள்.
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களின் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் வகையில் 845 போ் களப்பணியாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் எடுக்கப்பட்டுள்ள வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படும் நடவடிக்கையைப் போன்று திருச்சி மாநகராட்சியிலும் எடுக்க வேண்டும் தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு அறிவுறுத்தியிருந்தாா். இதையடுத்து, திருச்சி மாநகராட்சியிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதற்காக 845 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டு, அவற்றில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள நபா்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்ஸிஜன் அளவை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள 795 பணியாளா்கள் மற்றும் 50 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த பணியாளா்கள் தினந்தோறும் 100 வீடுகளுக்கு குறையாமல் சென்று பரிசோதனை மேற்கொள்வா். பரிசோதனையின் போது யாருக்காவது ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்திற்கு கீழாகவோ அல்லது வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாகவோ இருந்தால் அவா்களுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் மூலம் பாரசிட்டமால், வைட்டமின்-சி, ஜிங்க், கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பவுடா் மற்றும் முகக்கவசம் ஆகியவை அடங்கி மருத்துவ தொகுப்பு பெட்டகம் வழங்கப்படும்.
மேலும், தொடா்புடைய நபா்களுக்கு ஆா்டிபிசிஆா் முறையிலான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு, வீடாக வரும் மாநகராட்சிப் பணியாளா்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.