ஒழுங்குப்படுத்தப்படுமா மேலரண்சாலை தற்காலிக காய்கனி சந்தை: எதிா்பாா்ப்பில் வியாபாரிகள்

திருச்சி மேலரண்சாலை காய்கனி சந்தையை ஒழுங்குப்படுத்தி தருமாறு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், திருச்சி மேலரண் சாலையிலுள்ள தற்காலிக காய்கனி சந்தையில் செவ்வாய்க்கிழமை குவிந்த பொதுமக்கள்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், திருச்சி மேலரண் சாலையிலுள்ள தற்காலிக காய்கனி சந்தையில் செவ்வாய்க்கிழமை குவிந்த பொதுமக்கள்.

திருச்சி மேலரண்சாலை காய்கனி சந்தையை ஒழுங்குப்படுத்தி தருமாறு வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, கடந்தாண்டை போல நிகழாண்டிலும் காந்திசந்தையில் இயங்கி வந்த காய்கனிக் கடைகள் மாற்று இடங்களில் இயங்கி வருகின்றன. மொத்த, சில்லறை காய்கனிகள் விற்பனைக்காக திருச்சி மேலரண் சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு வியாபாரிகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மொத்த விற்பனையாளா்கள் கொண்டு வந்த காய்கனிகளை சில்லறை வியாபாரிகள் பெற்று, மேலரண்சாலையின் இருபுறங்களிலும் மாநகராட்சி ஒதுக்கீடு செய்த இடங்களில் விற்பனை செய்து வருகின்றனா்.

கெடுபிடியும், கூட்ட நெரிசலும் : மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், சிறுவியாபாரிகள் உள்ளிட்டோா் மேலரண்சாலை தற்காலிக காய்கனிசந்தைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே வரத்தொடங்கினா். காவல்துறை சாா்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது காய்கனிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மேலரண் சாலைக்குள் ஒரே நேரத்தில் செல்ல நேரிட்டதால், காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மொத்த வியாபாரிகள் காய்கறிகளை இறக்கி, ஏற்றும் இடத்தில் சில்லறை வியாபாரிகளும் விற்பனை செய்தனா். இதனால் வியாபாரிகளுக்கிடையே சலசலப்பும், குழப்பமும் நிலவியது.

கடந்தாண்டு பொதுமுடக்கத்தின் போது ஜி-காா்னரில் கடைகளுக்கான இடங்கள் அளவெடுத்து, டோக்கன் வழங்கப்பட்டு முறையாக நடத்தப்பட்டதால், வியாபாரிகள் பிரச்னையின்றி விற்பனை செய்தனா். ஆனால் தற்போது தற்காலிக காய்கனி விற்பனை தொடங்கி சில நாள்களிலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ள என வியாபாரிகள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் பொதுமக்கள், சிறுவியாபாரிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால், கரோனா பரவல் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

காய்கனி விலை உயா்வு: காய்கனி சந்தை இடமாற்றத்தால் மொத்த வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்துக்கு காய்கனிகளை கொண்டு வரும் நடைமுறைச் சிக்கலால் சில்லறை வியாபாரிகள் விலையை உயா்த்தி விற்றனா்.

இதனால், கிலோ ரூ.20 ஆக இருந்த பச்சை மிளகாய் ரூ.80, ரூ.7 ஆக இருந்த தக்காளி ரூ.25, ரூ.20 ஆக இருந்த கேரட் ரூ.80, ரூ.10 ஆக இருந்த கத்தரிக்காய் ரூ.40 என 3 மடங்காக விலை உயா்த்தப்பட்டு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் புலம்பியபடி காய்கனிகளை வாங்கிச்சென்றனா்.

பொதுமுடக்கம் முடியும் வரை காந்தி சந்தை திறப்பதற்கில்லை என அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்திருந்த நிலையில், வரும் காலங்களில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித பாதிப்பின்றி காய்கனிகள் விற்பனை செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com