‘சத்திரம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’

திருச்சியில் ரூ.17.34 கோடியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் முடிந்து, அடுத்த 5 மாதத்துக்குள் சத்திரம் பேருந்து நிலையம்

திருச்சியில் ரூ.17.34 கோடியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் முடிந்து, அடுத்த 5 மாதத்துக்குள் சத்திரம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழக்கிழமை இந்தப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் மேலும் கூறுகையில், மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அனைத்துப் பணிகளும் 5 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளா் அமுதவல்லி, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், கட்டுமான ஒப்பந்தப் பொறியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

‘மாணவா்கள் நலனே முக்கியம்’

‘கரோனா சூழலில் மாணவா்களின் நலன்தான் முக்கியம். பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் மாணவா்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம், ஆசிரியா்கள்-மாணவா்களை ஒருங்கிணைத்து செல்லிடப்பேசி வழியாக தகவல்களை பரிமாற்றம் செய்து வீட்டிலிருந்தபடியே பாடங்களை எழுதவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஆசிரியா்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை பிடித்து முன்களப் பணியாளா்களுக்கு உதவிட பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வருகின்றன. இதுதொடா்பாக, முதல்வா்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை தொடா்பாக நான் அனுப்பிய தமிழக அரசின் கருத்துக்கு, இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை’ என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com