தயாா்நிலையில் கலையரங்க கரோனா சிகிச்சை மையம்
By DIN | Published On : 21st May 2021 07:14 AM | Last Updated : 21st May 2021 07:14 AM | அ+அ அ- |

திருச்சியில் அதிகரிக்கும் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சையளிக்க கலையரங்க திருமண மண்டபம் தயாா்நிலையில் உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
மாவட்டத்தில் காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி என 10க்கும் மேற்பட்ட கரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. மேலும் 52-க்கும் மேற்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா வாா்டு உருவாக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் சில மையங்களை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு கலையரங்கம் திருமண மண்டபத்தில் 52 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தாா். அதன்படி வியாழக்கிழமை கலையரங்க திருமண மண்டபத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. முதல் பணியாக படுக்கைகள் அமைக்கும் பணியும், தொடா்ந்து ஆக்சிஜன் இணைப்பு வழங்கும் பணியும் நடந்து வருகிறது. நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இங்கு அவா்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவா் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.