அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகள்
By DIN | Published On : 26th May 2021 07:27 AM | Last Updated : 26th May 2021 07:27 AM | அ+அ அ- |

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்துகிடக்கும் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகள்.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலைபோல குவிந்துகிடக்கும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வீரியமிக்கதாக உள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விளங்கும் புத்தூா் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விபத்து, அறுவைச் சிகிச்சை, பிரசவம் என நோயாளிகள் வந்து செல்கின்றனா்.
இங்கு, நோயாளிகளின் அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், பிளாஸ்டிக் கவா், மருத்துவா்கள், நோயாளிகள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகள் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை தூய்மை பணியாளா்கள் மூலம் உடனடியாக மருத்துவமனையை விட்டு அப்புறபடுத்தப்படாமல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தாய்மை நலம் மற்றும் குழந்தைகள் நல கட்டடம் அருகே மலைபோல் குவிந்துக் கிடக்கின்றன.
இதனால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், அள்ளப்படாத குப்பை கழிவுகளில் இருந்து கொசுகள் மற்றும் புழுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது.
ஏற்கெனவே, கரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, வைரஸ் காய்ச்சல்கள் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினா்களுக்கு கூடுதல் தொற்றை ஏற்படுத்தும் வகையில் உள்ளது இந்த குப்பை மேடு. பெரிதும் சுகாதாரக்கேடு ஏற்படும் முன்பாகவே, இங்கு கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.