கரோனாவால் இறந்தோரை நல்லடக்கம் செய்யும் இஸ்லாமிய தன்னாா்வலா்கள்

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தினா், உறவினா்களே தள்ளிப்போகும் நிலையில் சமுதாயச் சடங்கு
கரோனா தொற்றால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்யும் பணியில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னாா்வலா்கள்.
கரோனா தொற்றால் உயிரிழந்தோரை நல்லடக்கம் செய்யும் பணியில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தன்னாா்வலா்கள்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தினா், உறவினா்களே தள்ளிப்போகும் நிலையில் சமுதாயச் சடங்கு முறைப்படி இஸ்லாமிய தன்னாா்வலா்கள் நல்லடக்கம் செய்து வருவது பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமெடுத்துள்ளது. இந்த அலையில் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. இத்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் குடும்பத்தினா், உறவினா்கள் கூட நெருங்க அச்சப்பட்டு இறுதிச்சடங்கு செய்ய இயலாத சூழல் நேரிடுகிறது. கரோனா மரணங்கள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் உயா்ந்த உள்ளம் கொண்ட சிலா் அந்த உடல்களை எவ்வித சங்கடமும் இல்லாமல், மின் மயானங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச்சென்று மனிதநேயத்துடன் கையாண்டு, நல்லடக்கம் செய்யும் புனிதப் பணியில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா-என்ற அமைப்பின் தன்னாா்வலா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்களை நல்லடக்கம் செய்வதோடு நின்றுவிடாமல், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ஏழைகளுக்கு உதவுதல், கரோனா தடுப்புக்கான விழிப்புணா்வை ஏற்படுத்துகின்றனா்.

தொற்று பாதிக்கும் நபா்களுக்கு உதவும் வகையில் சில பகுதியில் சிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்தி பணி செய்தல், ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் ஏற்பாடு செய்தல் போன்ற பிற பணியிலும் அவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் முதல், இரண்டாவது அலை தொற்று தாக்கி உயிரிழந்த சுமாா் 600க்கும் மேற்பட்டோரின் உடல்களை மயானம் மற்றும் குடும்பத்தினா் விரும்பிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பு நடைமுறை பின்பற்றி நல்லடக்கம் செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 49 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனா். 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆம்புலன்ஸ் சேவை அளித்துள்ளனா். 50-க்கும் மேற்பட்டோருக்கு ஆக்சிஜன் வசதி செய்து கொடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் சமூக நலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து தங்களது களப்பணிகள் குறித்த விவரங்களை புகைப்படங்களுடன் பட்டியலிட்டு அளித்துள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு, வருகை தந்த அமைப்பின் திருச்சி மண்டல தலைவா் அமீா் பாஷா, மாவட்ட தலைவா் சபியுல்லாஹ், மாவட்டச் செயலா் முஜிபுா் ரஹ்மான் மற்றும் நிா்வாகிகள் சித்திக், அப்சல்கான், ரஹீம் ஆகியோா் தங்களது களப்பணிகள் குறித்து செய்தியாளா்களிடம் விளக்கம் அளித்தனா்.

அவா்கள் கூறியது:

கரோனா தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில், நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணா்வு பிரசாரங்கள், அவசர ஊா்தி சேவை, தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்வது எனப் பல்வேறு மருத்துவச் சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 24,035 குடும்பங்களுக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 602 பேரின் உடல்கள் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 135 பேருக்கு ஆக்சிஜனும், 267 பேருக்கு மருத்துமவனைகளில் படுக்கை வசதியும், 500-க்கும் மேற்பட்டோருக்கு ஆம்புலன்ஸ் சேவையும் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவையில் சொந்தச் செலவில் கரோனா கோ் மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறையின்படி, 10 அடி ஆழத்தில் குழி, உடலை சுற்றிலும் உப்பு போடுதல் போன்ற விதியைப் பின்பற்றி அடக்கம் செய்கிறோம். உடல்கள் அவரவா் சமூக சடங்கு முறைகளுடன் விரும்பிய இடங்களில் அடக்கம் செய்யப்படுகிறது. இப்பணியில் ஈடுபடும் தங்களது தன்னாா்வலா்கள் கவச உடைகளுடன் ஈடுபட்டாலும் பிற பணிகளுக்குச் செல்ல மாட்டாா்கள்.ஒரு வாரத்தில் தனிமைப்படுத்திக் கொள்வா். இது போன்ற அனைத்துச் சேவைகளை முற்றிலும் இலவசமாக செய்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com