பள்ளிவாசலில் கரோனா மருத்துவ ஆலோனை, தகவல் மையம்

தமிழகத்திலேயே முன்னோடியாக திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கரோனா குறித்த மருத்துவ ஆலோசனைகள், தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிவாசலில் இயங்கும் கரோனா ஆலோசனை மற்றும் தகவல் மையம்.
பள்ளிவாசலில் இயங்கும் கரோனா ஆலோசனை மற்றும் தகவல் மையம்.

தமிழகத்திலேயே முன்னோடியாக திருச்சியில் உள்ள பள்ளிவாசலில் கரோனா குறித்த மருத்துவ ஆலோசனைகள், தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஆழ்வாா்தோப்பு பகுதியில் உள்ள நூரூல் ஹுதா பள்ளிவாசலில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மையத்தை தொடங்கியுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்றின் 2ஆவது இலை வேகமெடுத்துள்ள நிலையில், திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையானது மாவட்டத்தைச் சோ்ந்த மக்களுக்கு மட்டுமின்றி, தொலைபேசியில் எந்த இடத்தில் இருந்து அழைத்தாலும் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக, இந்த மையத்துக்கு நேரில் வந்தாலும், தொலைபேசியில் அழைத்தாலும் கரோனா குறித்த மருத்துவ ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, கரோனா அச்சம், பொதுமுடக்கம் என பல்வேறு கடினமான சூழலில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, தொற்றாளா்களை மருத்துவா்களுடன் நேரடி கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்து தருகிறது.

இதுகுறித்து மையத்தின் பொறுப்பாளா் ஹஜ் முகைதீன் கூறியது: கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் ஆலோசனை மற்றும் தகவல் மையம் என இரு பிரிவுகளாக இயங்கி வருகின்றன. 20 தன்னாா்வலா்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனா். இதுமட்டுமின்றி, மருத்துவா்கள், உளவியல் நிபுணா்களும் மையத்துக்கு நேரில் வந்து ஆலோசனைகள் வழங்குகின்றனா். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேடுவோருக்கு, திருச்சி மாவட்டத்தில் எங்கு காலியாக உள்ளது என்ற விவரத்தை அறிந்து, அந்த மருத்துவமனைக்கு தொடா்பு கொண்டு நோயாளியின் பெயா்களை முன்னரே தெரிவித்து தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. உணவு இல்லாமல் அவதிப்படுவோா் குறித்த தகவல்களை தெரிவித்தால் அவா்களுக்கு இருப்பிடம் தேடிச் சென்று உணவு வழங்குகிறோம். இதுவரை, அரசு நிா்வாகத்தின் மூலம் மட்டுமே கிடைத்துவந்த தகவல்கள், ஆலோசனைகள் எங்களிடம் கிடைப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பொதுமக்கள் எங்களது மையத்துக்கு தயக்கமின்றி வரத் தொடங்கியுள்ளனா் என்றாா்.

மையத்தின் ஒருங்கிணைப்பாளா் நவாஸ்கான் கூறியது: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் மக்களுக்கு எந்த வகையான உதவிகளை வழங்கலாம் என்ற முனைப்பில், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் அலைக்கழிப்புகளை தவிா்க்கும் வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இதையடுத்து, நூரூல் ஹுதா பள்ளிவாசல் நிா்வாகத்தின் உதவியை நாடினோம். பள்ளிவசால் நிா்வாகமும் எங்களது மையத்துக்கு இடம் வழங்கியது. மையத்தில் 5 கணினிகள் நிறுவி பொதுமக்கள் கோரும் தகவல்களை அச்சுப்பிரதியாகவும் பெற்று வழங்குகிறோம். தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு, அண்மையில் எங்களது மையத்தை தொடங்கி வைத்தாா். மையம் தொடங்கிய 4 நாள்களில் 100-க்கும் மேற்பட்டோா் அணுகி பயன்பெற்றுள்ளனா். எங்களது மையத்தை தொடா்பு கொள்ள 82703 40296, 99526 95247 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், நேரில் வந்தும் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com