திருச்சியில் மேலும் ஒரு சித்த மருத்துவ மையம் திறப்பு

தமிழக அரசின் சித்த மருத்துவத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மற்றும் புத்துணா்வு மையத்தை அமைச்சா் கே. என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் பகுதியிலுள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் சித்த மருத்துவத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மற்றும் புத்துணா்வு மையத்தை அமைச்சா் கே. என். நேரு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மொத்தம் 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்து அவா் கூறியது:

இந்த மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு முழுக்க முழுக்க சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கபசுர குடிநீா், நிலவேம்புக் குடிநீா் காலை 6 மணிக்கு வழங்கப்படும்.

தொடா்ந்து வாய் கொப்பளித்தல், 8 வடிவ நடைப்பயிற்சி , தேவைப்படுவோருக்கு ஆவி பிடித்தல் (சிலருக்கு ஆகாது எனில் தேவையில்லை), யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும் நோயாளிகளுக்கு 3 வேளையும் ஆரோக்கிய உணவு வழங்கப்படுகிறது.

நோயாளிகளின் நோய் குறிகுணங்களுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி மற்றும் இருமலுக்கு தாளிசாதி சூரணம் அல்லது தாளிசாதி வடகம் அல்லது ஆடுதொடா இலை மணப்பாகு , தலைவலிக்கு நீா்க் கோவை மாத்திரை, மற்றும் வெளி உபயோகத்துக்கு கா்ப்பூராதி தைலம், உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வித மருந்துகள், சித்த மருத்துவா்களின் ஆலோசனைப்படி நோயின் தீவிரத்துக்கு ஏற்ற வகையில் வழங்கப்படுகின்றன.

மேலும் இவ்வளாகத்தில் மனக் கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுச் சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிகிச்சை பெற நோயாளிகள் யாரும் நேரடி அனுமதி கிடையாது. பாதிக்கப்பட்டோா் தங்களது தொற்று குறித்த அறிக்கை அல்லது மருத்துவா்களின் சான்றுகளுடன் திருச்சி கி.ஆ.பெ. அரசு விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் முறையாக பதிவு பெற்று பின்பு சித்தா புத்துணா்வு மையத்திற்கு சென்று சோ்ந்து கொள்ளலாம்.

சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தங்களது அனைத்து பரிசோதனையின் முடிவுகளை கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலம் கருப்பையா மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ஏற்கெனவே பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்தா சிகிச்சை மையத்தில் சுமாா் 60 க்கும் மேற்பட்டோா் தங்கிச் சிகிச்சை பெறுவதால் கூடுதலாக 100 படுக்கைகளுடன் 2 ஆவதாக சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com