முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி நீர் திறப்பு - ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை, நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து, திருச்சி முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக ஆட்சியர் சு. சிவராசு அறிவித்துள்ளார்.
முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி நீர் திறப்பு - ஆட்சியர் அறிவிப்பு
முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி நீர் திறப்பு - ஆட்சியர் அறிவிப்பு


திருச்சி: தொடர் மழை, நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து, திருச்சி முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்தில் 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக ஆட்சியர் சு. சிவராசு அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது, கர்நாடக மற்றும் கேரளத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, இதனால் மேட்டூர் அணையானது அதன் முழுக்கொள்ளளவான 118 அடியை எட்டும் நிலையில் உள்ளது. 

எனவே மேட்டூர் அணையிலிருந்தும் அதிகளவு நீர் திறக்கப்பட்டு காவிரியில் வந்துகொண்டுள்ளது. இதனால் காவிரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள முக்கொம்பு அணைக்கு வரும் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் அதிலிருந்து காவிரியில் செல்லும் தண்ணீரும் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி மாவட்டத்திலும் மணப்பாறை பகுதியில் பெய்துள்ள கனமழை காரணமாக, கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆறுகளிலும் மழை வெள்ள நீர் அதிகளவில் வந்து கொண்டுள்ளது. 

எனவே,வெள்ள பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீருடன் மேலும் கொள்ளிடம் ஆற்றிலும் சுமார் 10,000 கன அடி தண்ணீர்  இன்று (08.11.2021) மாலை 6 மணிக்கு திறந்துவிடப்படுகிறது.  இதனால் கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரியில் அதிக நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ சுயப்படம் ("செல்ஃபி" ) எடுக்கவோ கூடாது. 

வெள்ள அபாய உதவிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது 93840 56213 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். இவை தவிர வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள தெரிவிக்கலாம். மேலும் டிஎன்-ஸ்மாரட் (TN- SMART) என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி குழுமாயி அம்மன் கோயில் அருகே, உய்யக்கொண்டான் வாய்க்காலில் வரும் வெள்ள நீர், ஆறுகண் மதகு அருகே வழிந்து செல்வதை பார்வையிடும் ஆட்சியர் சு. சிவராசு. உடன் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான். காவல் ஆணையர்  ஜி. கார்த்திகேயன்,  திமுக மாவட்ட பிரமுகர் வீரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com