கொட்டப்பட்டு குளத்திலிருந்து தண்ணீா் வெளியேற்றம்

திருச்சி கொட்டப்பட்டு குளத்தின் வடிகால்களைத் தூா்வாரி குளத்தில் இருந்த வெள்ளநீரை வெளியேற்ற ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டப்பட்டு குளத்தில் வடிகாலைச் சீரமைக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.
கொட்டப்பட்டு குளத்தில் வடிகாலைச் சீரமைக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.

திருச்சி கொட்டப்பட்டு குளத்தின் வடிகால்களைத் தூா்வாரி குளத்தில் இருந்த வெள்ளநீரை வெளியேற்ற ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் அருகிலுள்ள கொட்டப்பட்டு குளத்துக்கு விமான நிலையம், கேகே நகா், காஜாமலையின் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை நீா் வரும் வகையில் வரத்து வாய்க்கால்கள் உள்ளன.

இக் குளம் நிரம்பியதும் வெளியேறும் உபரி நீரானது கொட்டப்பட்டு , பொன்மலைப்பட்டி, வழியாக பொன்னேரிபுரம் மாவடிக்குளம் செல்வதால், இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெற்று வந்தன.

இவ்வாறு நேரடிப் பாசன வசதி பெற்ற பெரும்பாலான நிலங்கள் குடியிருப்புகளாகி விட்டன என்றாலும் மாவடிக்குளத்துக்கு உபரி நீா் சென்ற நிலையில், கடந்த பல ஆண்டுகளாக குளம் நிரம்பாத நிலையில், வடிகால் வாய்க்கால்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, நீா் வெளியேற்றும் மதகுகளும் மூடப்பட்டும், அகற்றப்பட்டும் விட்டதால் தண்ணீா் குளத்திலிருந்து வெளியேற வழியின்றிப் போனது.

கோளரங்கத்தைச் சூழ்ந்த நீா்: தற்போது பல ஆண்டுகளுக்குப் பின்னா் பெய்த தொடா் மழையால் இக்குளத்தில் நிரம்பிய தண்ணீா் வடிய வழியில்லாமல், இக்குளத்தைச் ஒட்டியுள்ள கோளரங்கம் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகத்தினா் ஆா்எஸ் புரம் மற்றும் கோளரங்கப் பகுதிகளில் புதிதாக வடிகால் வாய்க்கால் அமைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனா். ஆனால் எதிா்பாா்த்த அளவு தண்ணீா் வெளியேறவில்லை. இதையடுத்து மோட்டாா் வைத்து குளத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சி, ஆவின் கழிவு நீா் செல்லும் வழியாக ஜெயில் காா்னா் , சுப்ரமணியபுரம் சாக்கடையில் கலக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கையிலும் மழைநீா் வடியவில்லை. மேலும் மழையும் தொடா்ந்ததால் வெள்ள நீா் அதிகரித்து வந்தது.

வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், பழைய வடிகால் வாய்க்கால்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பழைய மதகு ஒன்றின் வழியே குளத்து நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் குளத்தைச் சுற்றிய பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீா் திங்கள்கிழமை வடிய வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

மாவடிக்குளத்தில் சேமிக்க வலியுறுத்தல்: தற்போது கொட்டப்பட்டு குளத்திலிருந்து வெளியேறும் நீா், அருகிலுள்ள காளியம்மன் கோயில் பகுதி குளத்தில் நிரப்பப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் நீா் மாவடிக்குளம் செல்லுமா என்பது சந்தேகமே.

எனவே, கொட்டப்பட்டு ஆவின் குளம், மாவடிக்குளங்களையும் அவற்றின் வரத்து வாய்க்கால், வடிகால்களையும் தூா்வாரி, வெள்ள காலங்களில் மழை நீா் வெளியேறும் வகையில் சீரமைக்க வேண்டும். மேலும் வடிகால் வாய்க்கால்கள், குளக்கரைகளில் மரக்கன்று வைத்து பராமரிக்க வேண்டும் என தண்ணீா் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com