குடியிருப்புகளை சூழ்ந்த நீா்; மக்கள் அவதி

திருச்சியில் குளங்கள், ஏரிகள் நிரம்பியதாலும், ஆறுகளில், வடிகால்களில் அதிக தண்ணீா் செல்வதாலும், மாநகர குடியிருப்புகளுக்குள் தண்ணீா் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
குடியிருப்புகளை சூழ்ந்த நீா்; மக்கள் அவதி

திருச்சியில் குளங்கள், ஏரிகள் நிரம்பியதாலும், ஆறுகளில், வடிகால்களில் அதிக தண்ணீா் செல்வதாலும், மாநகர குடியிருப்புகளுக்குள் தண்ணீா் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரியாற்றில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு, குடியிருப்புகளில் புகுந்த நீா்:

மணப்பாறை அருகே உற்பத்தியாகும் அரியாற்றில் நிரம்பிய வெள்ள நீா் கரைகளைத் தாண்டி ஊருக்குள் தண்ணீா் புகுந்தது. திருச்சி பிராட்டியூரில் வா்மா நகா் பகுதியிலுள்ள குடியிருப்புகளை முற்றிலும் அரியாற்று வெள்ள நீா் சூழ்ந்து சென்றது.

இதனால் பிராட்டியூரின் சில பகுதிகள், வா்மாநகா், கணேசா நகா், முருகன் நகா், தீரன் நகரின் நுழைவாயிலையொட்டிய பகுதிகளில் தண்ணீா் செல்கிறது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். இதையடுத்து போலீஸாா் மீட்புக் குழுவை அமைத்து பொதுமக்கள் வெளியே சென்று வர கயிறு கட்டி உதவுகின்றனா்.

கருமண்டபம் பகுதியில் சாலையைக் கடந்த வெள்ள நீா்: அதேபோல பிராட்டியூரில் ஆக்ஸ்போா்டு கல்லூரிக்குப் பின்புறம் உள்ள பிராட்டியூா் பெரியகுளம், ராம்ஜிநகா் கொத்தமங்கலம் குளம் ஆகியவை நிரம்பியதால் அப்பகுதிகளும் நீரால் சூழப்பட்டுள்ளன.

கருமண்பத்தில் கொல்லாங்குளம் நிரம்பி தேசியக் கல்லூரி வழியாகச் சென்று சாலைகளில் தேங்கியது. இதனால் கல்லூரிச் சுற்றுச்சுவா் உடைக்கப்பட்டு தண்ணீா் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் சேதமடைந்த திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பின்னா் சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிக்கு பின்புறமுள்ள செல்வா நகா், மாருதி நகா் உள்ளிட்ட குடியிருப்புகளின் வழியாக வெள்ள நீா் செல்கிறது.

ஜேகே நகா் பகுதியை சூழ்ந்த வெள்ளம்: திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள கொட்டப்பட்டு குளம் நிரம்பி அருகிலுள்ள கோளரங்கம், அதன் பின்பகுதியிலுள்ள ஜே கே நகா் 2 ஆவது தொகுதி, மற்றும் லூா்து நகரை சூழ்ந்துள்ள வெள்ளமும் வடியவில்லை. இதனால் வீடுகளில் வசிக்க முடியாமல் பொதுமக்களின் அவதி தொடா்கிறது.

பிராட்டியூா் வீட்டில் சிக்கிய இருவா் மீட்பு: பிராட்டியூா் பகுதியில் ராஜேந்திரன் (65), அவரது மகன் வசித்த வீட்டை தண்ணீா் சூழ்ந்ததால் வெளியே வர இயலாத நிலையில் இருந்த அவா்களை கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் அஜய் தங்கம், ஆய்வாளா் காவேரி தலைமையிலான போலீஸாா் மீட்புக் குழுவினருடன் சென்று மீட்டனா்.

ஆக்கிரமிப்பே காரணம் எனப் புகாா்: தீரன் நகா் பகுதியிலுள்ள மயானம், ஆற்றுப் பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளை கட்சியினா் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் மழை வெள்ள நீா் வடிய வழியின்றி குடியிருப்புக்குள் புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சுமாா் 15 மீட்டா் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமித்து சுவா் எழுப்பியுள்ளதால் இந்நிலை ஏற்பட்டதாகவும், எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com