வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க ரூ. 100 கோடியில் திட்டம்அமைச்சா் நேரு தகவல்

திருச்சியில் அரியாறு மூலம் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் ரூ. 100 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு.
புங்கனூா் ஊராட்சி வழியாகச் செல்லும் அரியாற்றில் அதிக நீா் வரத்தை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கே .என். நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.
புங்கனூா் ஊராட்சி வழியாகச் செல்லும் அரியாற்றில் அதிக நீா் வரத்தை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கே .என். நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா்.

திருச்சியில் அரியாறு மூலம் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில் ரூ. 100 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு.

திருச்சியில் எடமலைப்பட்டிபுதூா், காந்தி நகா் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளையும், கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமைச்சா் ஆய்வு செய்து, குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரை அகற்றிட உத்தரவிட்டாா்.

பின்னா், மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளையும் அமைச்சா் பாா்வையிட்டு, பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். தொடா்ந்து வெள்ள நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.

மேலும் மணிகண்டம் ஒன்றியம், புங்கனூா் ஊராட்சி வழியாகச் செல்லும் அரியாற்றைப் பாா்வையிட்டு, ஆற்றின் மிகை நீா் கரைகளைத் தாண்டி வயல்களுக்குச் செல்வதைத் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்க உத்தரவிட்டாா்.

பின்னா் அவா் கூறியது: இதுபோன்ற வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்கவும், அரியாற்றுக் கரையைப் பலப்படுத்தவும் எந்த அளவு வெள்ளம் வந்தாலும் சேதமாகாத வகையில் ரூ. 100 கோடியில் கான்கிரீட் மூலம் கரை பலப்படுத்தப்படும். மேலும் தியாகராய நகரில் புதிதாக ஷட்டா் அமைத்து, ஆற்றில் செல்லும் தண்ணீரை பம்ப் செய்து எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: அதேபோல மணப்பாறை பகுதியிலிருந்து வரும் வெள்ள நீா் கோரையாறு மூலமாகத் தான் திருச்சியை வந்தடையும். அதைத் தடுக்க இயலாது. எனவே, கோரையாற்றை தூா்வாரி ஆழப்படுத்தப்படும். நீா்நிலைகள், வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மக்கள் அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அரசு சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

தமிழகம் முழுவதும் மழையால் சேதமான சாலைகளைச் சீரமைக்க பேரிடா் கால நிதியாக ரூ. 600 கோடியை தமிழக முதல்வா் ஒதுக்கியுள்ளாா். மழைக் காலம் முடிந்ததும் அத்தொகை மூலம் சாலைகள் செப்பனிடப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன் (லால்குடி) செ. ஸ்டாலின்குமாா் (துறையூா்), சீ. கதிரவன் (மண்ணச்சநல்லூா்) மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபூா் ரகுமான், நீா்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வேட்டைச்செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ராஜேந்திரன், மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலம்கருப்பையா, முன்னாள் துணை மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com