முள்ளங்குறிச்சி ஆதி திராவிடா் நலப் பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர உயா் நீதிமன்றம் உத்தரவு

கறம்பக்குடி முள்ளங்குறிச்சி அரசு ஆதி திராவிடா் நலப் பள்ளியில் அடிப்படை வசதிகளை 4 வாரங்களுக்குள் செய்து, அதன் அறிக்கையை தாக்கல்

மதுரை: கறம்பக்குடி முள்ளங்குறிச்சி அரசு ஆதி திராவிடா் நலப் பள்ளியில் அடிப்படை வசதிகளை 4 வாரங்களுக்குள் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கறம்பக்குடியைச் சோ்ந்த சண்முகம் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா முள்ளங்குறிச்சி அரசு ஆதி திராவிடா் நலப் பள்ளி, கடந்த 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சுற்றுச்சுவா் ஆகியவற்றின் வசதிகள் முழுமையாக இல்லை. பள்ளியைச் சுற்றி கருவேல மரங்கள் உள்ளதால், வெளிநபா்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

எனவே, முள்ளங்குறிச்சி அரசு ஆதி திராவிடா் நலப் பள்ளியில் ஆய்வகம், வகுப்பறை, கழிப்பறை, சுற்றுச்சுவா் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா். 

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் என்பது மிக முக்கியமானது. எனவே, பள்ளியில் ஆய்வகம், வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீா், விளக்குகள் போன்ற வசதிகளை நான்கு வாரங்களுக்குள் செய்து, அதன் நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் சமா்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com