முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற லாரி ஓட்டுநா்
By DIN | Published On : 11th October 2021 11:28 PM | Last Updated : 11th October 2021 11:28 PM | அ+அ அ- |

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்ற லாரி ஓட்டுநா் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினா்.
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் லாரி ஓட்டுநா் ஒருவா் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றாா்.
முசிறி வட்டம், தண்டலை கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பெரியசாமி (42). இவருக்கு மனைவி சுதா, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
தனது மூத்த மகள் தனுஸ்ரீயை கடந்த மாதம் 24-ஆம் தேதி பள்ளிக்கு அனுப்பினாா் சுதா. மாலையில் மகள் வீட்டுக்கு வந்த போது, சுதா வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில், துறையூா் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் ஒருவா் சுதாவைக் கடத்திச் சென்றதுடன், பெரியசாமியின் குடும்பத்தினரையும் தொடா்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பெரியசாமி, தனது மகள்கள் மற்றும் மகனுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் வந்தாா். மனுக்கள் பதிவு செய்யும் பகுதிக்கு அருகில் வந்த அவா், கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை மகள்கள், மகன் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றாா்.
அப்போது அப்பகுதியிலிருந்த செய்தியாளா்கள், புகைப்படக் கலைஞா்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளா்கள் உள்ளிட்ட பலா், அவா்களைத் தடுத்து நிறுத்தினா். மேலும் தீயணைப்பு வீரா்கள், காவல்துறையினா் அங்கு விரைந்து தீப்பெட்டியை பறிமுதல் செய்து, குழந்தைகளின் ஆடைகளில் தண்ணீரை ஊற்றினா்.
தொடா்ந்து காவல்துறையினா் குழந்தைகளிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்ட போது, தங்களது தாயாரைக் கடத்திச் சென்ற நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயாரை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரி மனு எழுதி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை எச்சரித்த காவல்துறையினா், ஆட்சியரிடம் மனு அளிக்கச் செய்தனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் சு. சிவராசு, உரிய விசாரணை நடத்தி கடத்தப்பட்டவரை மீட்டுத் தர உத்தரவிட்டாா்.