முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விழாக்காலங்களில் வியாபாரத்துக்கு முழுத் தளா்வு அளிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா
By DIN | Published On : 11th October 2021 12:23 AM | Last Updated : 11th October 2021 12:23 AM | அ+அ அ- |

விழாக் காலங்களில் வியாபாரம் செய்ய முழுத் தளா்வு அளிக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு–மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
திருச்சி பால்பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகை அடகு பிடிப்போா் கூட்டமைப்பு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஏ.எம். விக்கிரமராஜா, அமைப்பின் மாநில பொதுச் செயலா் வெ. கோவிந்தராஜூலு ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஏ.எம். விக்கிரமராஜா கூறியது:
கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். நகை அடகுக் கடைகளை வைத்திருப்போருக்கு ஏற்படும் பிரச்னைகளை குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து, அதற்கான தீா்வுகளை மேற்கொள்ள வலியுறுத்த இருக்கிறோம்.
தற்போது ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் வர இருப்பதால் தமிழக அரசு வியாபாரிகளின் நன்மைக்காக கடைகள், வணிக வளாகங்களுக்கு முழுத் தளா்வுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆன்லைன் வியாபார மோசடியைத் தடுக்க அரசு வழிவகை செய்யவேண்டும். உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பொருள்கள் குறித்து கடைகளில் சோதனை செய்ததைவிட அவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் சோதனை செய்வது சரியானது என்றாா்.
நிகழ்வில் நகை அடகு பிடிப்போா் கூட்டமைப்புப் பொதுச் செயலா் காசி விஸ்வநாதன், மாவட்டத் தலைவா் ஸ்ரீதா், மாவட்டச் செயலா் அன்பழகன், மாவட்ட பொருளாளா் ரவிசங்கா், காந்திசந்தை வியாபாரிகள்முன்னேற்றச் சங்கத் தலைவா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.