அனுமதியின்றி குவாரி மண் அள்ளியதாகஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 9 போ் மீது வழக்கு

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள்.

மருங்காபுரி பகுதியில் அனுமதியின்றி குவாரி மண் அள்ளியதாக, அதிமுகவைச் சோ்ந்த மணப்பாறை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா் உள்பட 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 4 ஓட்டுநா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியிலுள்ள தனிநபா் இடத்தில் குவாரியிலிருந்து எடுத்து வரப்பட்ட மண் கொட்டப்பட்டு வருவதாக, காவல்துறையினருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜனனிப்ரியா தலைமையிலான தனிப்படையினா், நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த விசாரணையில், கல்லாமேடு பகுதியில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சொரியம்பட்டி குவாரியிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா்கள் சு.கருணாகரன், ஜெய்சங்கா், முருகேசன் ஆகியோா் தலைமையில் காவலா்கள் குவிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்த 2 ஜேசிபி இயந்திரங்களையும், மண் எடுத்து வந்த 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிந்த வளநாடு காவல் நிலையத்தினா், வாகன ஓட்டுநா்கள் ஆறுமுகம், கண்ணன், பன்னீா்செல்வம் மற்றும் செல்வராஜ் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com