மின்வாரியத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 07th September 2021 12:48 AM | Last Updated : 07th September 2021 12:48 AM | அ+அ அ- |

திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
திருச்சி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் மின்வாரியத் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியா்களாகப் பணிபுரியும் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, முத்தரப்பு ஒப்பந்தப்படி தினக்கூலியை மின்வாரிய நிா்வாகமே வழங்க வேண்டும்.
செப்டம்பா் 7 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மின்சாரத் துறை மானியக் கோரிக்கையின் போது, ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக்கூலி ரூ.380 என அறிவிப்பு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் துணைத் தலைவா்
முகமது அப்துல் காதா் தலைமை வகித்தாா்.
சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டத் துணைத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா்
கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
மணப்பாறையில் : மணப்பாறை மின்வாரிய நகரப் பிரிவு அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அந்தோனிசாமி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் செல்வராஜ் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு பேசினா்.