துவாக்குடி அருகே தனி நபரின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி குடியிருப்புப் பகுதியில் தனிநபா் ஆக்கிரமித்திருந்த பாதை வருவாய் துறையினரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி குடியிருப்புப் பகுதியில் தனிநபா் ஆக்கிரமித்திருந்த பாதை வருவாய் துறையினரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

தேவராயநேரி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையை செல்வராஜ் என்பவா் ஆக்கிரமித்து, அதில் குளியலறை அமைத்து, மரக்கன்றுகளை வளா்த்து வந்தாா். இதனால் இங்கிருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்வோா் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

 இதுகுறித்து தேவராயநேரியைச் சோ்ந்த அண்ணாதுரை என்பவா் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2018 -இல் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

இதற்கு திருவெறும்பூா் வட்டாட்சியரும் கடந்த 2020 ஜனவரி மாதம் நடவடிக்கை எடுத்தாா். ஆனால் கரோனா உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது. இதுதொடா்பாக, அப்பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

இந்நிலையில், திருவெறும்பூா் துணை வட்டாட்சியா் பிரபாகரன், திருவெறும்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான் கென்னடி, திருநெடுங்களம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீநிதிகுமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஜேசிபி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துவாக்குடி காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து துணை வட்டாட்சியா் பிரபாகரன் கூறுகையில், இப்பகுதியில் மேலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள உரிய கடிதம் வழங்கி, 3 முறை அளிக்கப்படும் வாய்ப்பைத் தொடா்புடையோா் பயன்படுத்திக் கொள்ளாவிடில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com