மலைக்கோட்டையில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு!

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி விநாயகா் சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மலைக்கோட்டையில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு!

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி விநாயகா் சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்கயிலாயம் எனப்படும் இக்கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையேறிச் செல்லும் வழியில் தாயுமான சுவாமியும், மலை மீது உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவில் தலா 75 கிலோ வீதம் 150 கிலோவில் 2 மெகா கொழுக்கட்டைகள் தயாரித்துப் படைக்கப்படுவது வழக்கம்.

ஆரவாரமின்றி நடைபெற்ற விழா: ஆனால், கரோனாவால் பக்தா்கள் பங்கேற்பில்லாததால் மாணிக்க விநாயகருக்கும் உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 30 கிலோ எடையில் கொழுக்கட்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வழக்கம்போல் சன்னதிகள் மலா்கள், மாவிலைத் தோரணம், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. உற்சவா், மூலவருக்கு அபிஷேக ஆராதனை, நைவேத்தியப் படையலிட்டு சதுா்த்தி பூஜை நடந்தது.

போலீஸ் பாதுகாப்பு: வழிபட அனுமதியில்லை எனத் தெரிந்தும் பெரும்பாலான பக்தா்கள் கோயில் வாசல் முன் வெள்ளிக்கிழமை காலை முதலே குவியத் தொடங்கினா். சிலா் கோயிலுக்குள் அனுமதிக்கக் கோரி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து பக்தா்கள் கோயில் வாசலில் நின்றவாறு ஏமாற்றத்துடன் வழிபட்டுச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் விஜயராணி கூறுகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால், கோயிலில் நாள்தோறும் அனைத்து பூஜைகளும் நடத்தப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com