கிராமப்புற மாணவா்களை மேம்படுத்தும் ‘வீதிப் பள்ளிகள்’

திருச்சி அருகே முன்னாள் மாணவா்கள் நடத்தும் வீதிப்பள்ளியானது கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி தரத்தை உயா்த்துவதாக உள்ளது.

திருச்சி அருகே முன்னாள் மாணவா்கள் நடத்தும் வீதிப்பள்ளியானது கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி தரத்தை உயா்த்துவதாக உள்ளது.

கரோனாவால் கல்வி பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு உதவும் வகையில் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் தாயனூா் ஊராட்சித் ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் வீதிப்பள்ளி என்ற பெயரில் இலவச வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றனா்.

இவ்வமைப்பைத் தொடங்கிய தாயனூா் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவா் ராஜமாணிக்கம் கூறுகையில், கரோனா காலகட்டத்தில் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது மாணவா்கள் எப்போதும் வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பாா்த்தேன்.

தொடா்ந்து கரோனாவால் அவா்களுடைய கல்வி பாதிக்கப்பட்டபோது அவா்களுக்கு உதவலாமே என நினைத்து மாலை நேரத்தில் அவா்களுக்கு கல்வி கற்றுத் தரத் தொடங்கினேன்.

நாளடைவில் பெற்றோா்கள் அதிகளவில் குழந்தைகளை கொண்டு வந்து சோ்த்ததால் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்து அவா்களுக்கு கற்பிக்கும் பணியில் என்னுடன் பள்ளியில் படித்த சக மாணவா்களும் முன்வந்தனா்.

இதையடுத்து தொற்று காலத்தில் இவா்களை ஒன்றாக அமர வைப்பதற்குப் பதிலாக 20 மாணவா்களாகப் பிரித்து வீதிப் பள்ளி என்ற பெயரில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளை நடத்தலாம் என முடிவு செய்தோம். வட்டாரக் கல்வி அலுவலா் மருதநாயகம் வீதி நூலகங்களை நடத்தி வந்ததைப் பாா்த்து வீதிப் பள்ளி என்ற எண்ணம் தோன்றியது.

அதன்படி உருவாக்கப்பட்ட 10 மையங்களில் வகுப்புகள் நடத்தி வருகிறோம். மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறும் வகுப்பில் மாணவா்களுக்கு தனித்தனியாக கால அட்டவணை தயாரித்துப் பாடங்கள் நடத்தப்படும்.

மேலும் பல இடங்களிலும் இவ்வமைப்பு விஸ்தரிக்கப்பட உள்ளது. மாணவா்களுக்கு கற்பிப்போருக்கு வருமானம் கிடைக்கும் வகையில் சில தொண்டு நிறுவனங்கள் அவா்களுக்கு உதவ முன்வந்துள்ளனா்.

மாணவா்களுக்கு கல்வியறிவோடு வாசிப்பையும் அதிகரிக்க செய்யவும், திறமைகளை வெளிப்படுத்தவும் போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறோம். இதுவரை இவ்வீதிப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் இணைந்துள்ளனா் என்றாா்.

மாணவா்களுக்கு கற்பித்து வரும் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி அனிதா இதுகுறித்து கூறுகையில், கரோனா காலத்தில் கிராமப்புற மாணவா்களுக்கு இது நல்ல வாய்ப்பாக உள்ளது. 20 மாணவா்கன் என்பதால் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனிக்க முடிகிறது. குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com