கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி அமல் தேவை மாநில மாநாட்டில் தீா்மானம்

கட்டுமானப் பெண் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்டுமான பெண் தொழிலாளா் மாநில மாநாட்டில் பேசுகிறாா் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் கே. ரவி.
கட்டுமான பெண் தொழிலாளா் மாநில மாநாட்டில் பேசுகிறாா் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் கே. ரவி.

கட்டுமானப் பெண் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சக் கூலி சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைப்பாய் திரள்வோம் என்ற தலைப்பில் கட்டுமானப் பெண் தொழிலாளா் மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மாநாட்டை, ஏஐடியுசி தேசிய செயலா் வகிதா நிஜாம், தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாவட்டச் செயலா்கள் கலாராணி (கரூா்), மருதாம்பாள் (திருச்சி), சின்னாத்தாள் (புதுக்கோட்டை), எலிசபெத் (தஞ்சாவூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச்செயலா் கே. ரவி, மாவட்டத் தலைவா் சுரேஷ், செயலா் சண்முகம், துணைச் செயலா் முருகன் ஆகியோா் வாழ்த்தினா். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிா்வாகிகள், பெண் தொழிலாளா்கள் என பலா் பேசினா்.

கூட்டத்தில் பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கூலியை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். 1948ஆம் ஆண்டின் சட்டப்படி ஒருநாள் குறைந்தபட்சக் கூலியாக ரூ. 650 வழங்க வேண்டும். மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டுவரப்படும் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் கட்டுமானத் தொழிலாளிக்கு பேறுகால பயன்களாக சட்டப்படி குறைந்தபட்சம் 6 மாதம் சம்பளத்துடன் விடுப்பு கிடைக்க வேண்டும். விடுப்பு காலத்திற்கு மாதம் ரூ.15,000 வீதம் 6 மாதத்திற்கு ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். மேலும் தனி கழிப்பறை வசதி அளிக்கப்பட வேண்டும்.

அனைத்துப் பெண்களுக்கும் உயா்நிலைப் பள்ளி வரை கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும். தொழிற்கல்விகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு தொழில் பயிற்சிகளை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் மூலம் அளித்து, பதவி உயா்வுக்கு வழிசெய்ய வேண்டும்.

சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களில் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீட்டை உத்திரவாதப்படுத்தி, 50 சத இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசன திருத்தம் தேவை. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தகுதி படைத்த 2 லட்சம் மூத்த தொழிலாளா்களில் 40 ஆயிரம் போ் ஓய்வூதியம் பெறாமலேயே இறந்து விட்டனா். எனவே , எஞ்சிய அனைவருக்கும் முன்தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளி கடைசியாக பெரும் சம்பளத்தில் 50 சத தொகை ஓய்வூதியமாகக் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழில்களில் தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு 90 சத வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண் தொழிலாளா்கள் பலரும் மதுவுக்கு அடிமையானதால் இத்தகைய நிலை உருவாகிறது. எனவே, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். பெண்களும், குழந்தைகளும் வாழும் உரிமையைக் காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com