திருவெறும்பூரில் 3 வீடுகளில் 40 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளி திருட்டு

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இரு நாள்களில் மூன்று வீடுகளில் 4O பவுன் நகை, 4 கிலோ வெள்ளி, ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு நடைபெற்ற வீடு
திருட்டு நடைபெற்ற வீடு

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இரு நாள்களில் மூன்று வீடுகளில் 40 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி, ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அம்மன் நகர் விஸ்தரிப்பு 6 ஆவது தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் செல்லையன் (62). இவர் கடந்த 2ஆம் தேதி சென்னை கல்பாக்கத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினார். வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ஒரு பவுன் வைர தோடுஆகியவை திருடு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே போல, அம்மன் நகர் 6 ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களின் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த 7ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊரான மன்னார்குடிக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு கிலோ வெள்ளி, ஒரு பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பட்டு புடவைகள், எல் இ டி - டிவி  உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்தும் திருவெறும்பூர் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சரவணன் வீட்டின் அருகிலிருந்த ஓய்வுபெற்ற பெல் ஊழியர் வரதாச்சாரி (62) வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. இவர் சேலத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளது. சரவணன் திங்கள் கிழமை அதிகாலை 4.15 மணிக்கு எழுந்துள்ளார். அப்போது தனது வீட்டின் அருகே பூட்டியிருந்த வீட்டில் லைட் எரிவது தெரிந்துள்ளது. யார் என கேட்டபோது, அங்கு மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே கொள்ளை அடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்களை பார்த்து சரவணன் சத்தம் போட்டுள்ளார் இதனையடுத்து கொள்ளையர்கள், கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து சரவணன் வரதாச்சாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில், வரதாச்சாரி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 30 பவுன் நகை 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது தெரியவந்தது இச்சம்பவம் குறித்து வரதாச்சாரி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

திருவெறும்பூர் போலீசார் இந்த மூன்று சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com