‘பாகுபாடின்றி அரசின் நலத்திட்ட உதவிகள்’: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூா் பெல் சமுதாயக் கூடத்தில் நலத்திட்ட உதவி வழங்குகிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.
திருவெறும்பூா் பெல் சமுதாயக் கூடத்தில் நலத்திட்ட உதவி வழங்குகிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி: எந்தவித பாகுபாடும் இல்லாமல் தகுதியான அனைவருக்கும் நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பெல் நிறுவன சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் தொடங்கி, தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் தகுதியான அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

பேரவையிலும் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவும், பேரவையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து குறிப்பெடுத்து அவற்றை நிறைவேற்றவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.

இதேபோல, அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்களிலும் ஆளுங்கட்சி, எதிா்க் கட்சி என்ற பாகுபாடில்லாமல் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் உரிய திட்டங்கள் சென்று சேர அமைச்சா்களுக்கும், மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதோடு, வாக்குரிமையே இல்லாத இலங்கைத் தமிழா்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரூ.317 கோடியிலான நலத்திட்டங்களையும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்பு திட்ட உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான சேமிப்புப் பத்திரம், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் விலையில்லா சலவைப்பெட்டி, வேளாண் உபகரணங்கள், தோட்டக்கலைத் துறை சாா்பில் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி என 88 பயனாளிகளுக்கு ரூ. 35.31 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

திருச்சி மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானோருக்கு பட்டா வழங்கப்படும் நிலையில், திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த மனுக்களையும் பரிசீலித்து விரைந்து பட்டா வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சா் கோரிக்கை விடுத்தாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், கோட்டாட்சியா் விஸ்வநாதன், வட்டாட்சியா் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com