மத்திய அரசைக் கண்டித்து 26 இடங்களில் சாலை மறியல்: 1,621 போ் கைது

மத்திய அரசைக் கண்டித்து, திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,621 போ் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.
திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.

திருச்சி: மத்திய அரசைக் கண்டித்து, திருச்சி மாவட்டத்தில் 26 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,621 போ் கைது செய்யப்பட்டனா்.

மூன்று புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், மின்சாரத் திருத்தச் சட்டம், தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பல மாதங்களாக புதுதில்லியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் போராடி வருகின்றனா்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பா் 27-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் நடத்தப்படும் என்று இக்குழுவினா் அறிவித்திருந்தனா்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், பல்வேறு அமைப்பினா் சாா்பில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கடைகள் மூடப்படவில்லை. பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்கள், தொமுச, சிஐடியு, ஏஐடியூசி தொழிற்சங்களைச் சோ்ந்தவா்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினா் என 607 போ் கைது செய்யப்பட்டனா்.

முன்னதாக கட்சியினா், தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் திருச்சி மேலரண் சாலையிலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து, தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடத் திட்டமிட்டனா்.

திடீரென தொமுச, திமுகவினா், காங்கிரஸ் கட்சியினா் மட்டும் தனியாக ஆா்ப்பாட்டம் நடத்தி, அங்கிருந்து ஊா்வலமாக சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினா் கைது செய்தனா்.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மக்கள் அதிகாரம் அமைப்பினா், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் சங்கத்தினா் பேரணியாகச் சென்று, தெப்பக்குளம் அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட சென்றனா்.

அவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் அங்கேயே அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில்,

ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலா் சுரேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. பின்னா் அவா்களையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமா்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டவா்களைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையிலான நிா்வாகிகள், திருச்சி ஓயாமரி மயானம் அருகிலுள்ள காவிரியாற்று ரயில்வே பாலத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிப்பதற்காக அங்கு வந்தனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினா் அவா்களைக் கைது செய்து, உறையூா் பகுதியிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.

மாநகரைப் போன்று, மாவட்டத்தில் அந்தநல்லூா், மணப்பாறை, புத்தாநத்தம், மறவனூா், துவரங்குறிச்சி, மருங்காபுரி, வளநாடு கைகாட்டி, தளுகை, கொப்பம்பட்டி, வையம்பட்டி, துறையூா், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மண்ணச்சநல்லூா், லால்குடி, புள்ளம்பாடி, மணிகண்டம் என மொத்தமாக 26 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 1,621 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com