திருச்சி விமான நிலையத்தில் 15 மாதங்களில் ரூ.43 கோடி தங்கம் பறிமுதல்: கரோனா பொது முடக்கக் காலத்திலும் குறையாத கடத்தல்

கரோனா பொது முடக்கக் காலத்தில் கூட, திருச்சி விமான நிலையத்தில் கடந்த 15 மாதங்களில் மட்டும் ரூ.43 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் கூட, திருச்சி விமான நிலையத்தில் கடந்த 15 மாதங்களில் மட்டும் ரூ.43 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, துபை, இலங்கை, சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு சா்வதேச விமானப் போக்குவரத்து நேரடியாகவும், பல நாடுகளுக்கு மாற்று விமானங்கள் மூலமாகவும் நடைபெற்று வந்தது.

கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, பொது விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் மீட்பு சிறப்பு விமானங்கள் ஏற்கெனவே போக்குவரத்து உள்ள நாடுகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமானங்கள் மூலம் கடந்த மாதம் வரை 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பல்வேறு நாடுகளிலிருந்து மீட்கப்பட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.

குறையாத தங்கம் கடத்தல் : பொது விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மீட்பு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதால் அதன் மூலமாகத் தங்கம் கடத்தி வருவதும் குறையவில்லை.

திருச்சி விமான நிலையத்தில் 2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரை தங்கம் கடத்தல் தொடா்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

2021 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை தங்கம் கடத்தி வந்தது தொடா்பாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்டன. மொத்தமாக 15 மாதங்களில் ரூ.43 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொது விமானப் போக்குவரத்து இருந்த காலத்தில் பிடிபட்ட தங்கத்துக்கு இணையாக தற்போது பிடிபட்டுள்ளது என்றும் சுங்கத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சொற்ப பணத்துக்காக...: தங்கம் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு, கடத்தி வரும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்றவாறு வழக்கு நடைமுறைகள் இருக்கும்.

தங்கத்தை ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் கடத்தி வந்து கைதாகும் நபா்கள், அவ்வளவு எளிதாக பிணையில் வெளியே வர இயலாது.

பிணையில் வருவதற்காக ரூ. 1 லட்சம் ரொக்கம் செலுத்துவதுடன், இருவா் உறுதியளிக்க வேண்டும். கைதான நபரின் கடவுச்சீட்டு முடக்கப்படும். கைதானோா், எந்த அரசுப் பணிக்கும் செல்ல முடியாது.

ஆசனவாய் வழியாக உடலுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வரும் நபா், தங்கம் வெளியே எடுத்த பின்னா் ஏற்படும் உபாதைகளுக்கு, லட்சக்கணக்கான தொகை செலவழித்து சிகிச்சை பெற வேண்டிய நிலையும் ஏற்படும். இத்தனை இடா்பாடுகள் இருந்தும் அந்த விவரம் தெரியாமல், கிடைக்கும் சொற்ப பணத்துக்காக தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் சரியான வேலை, வருமானமின்மை காரணமாக தொழிலாளா்கள் வேறு வழியின்றி தங்கம் கடத்தல் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com