மேலும் ஒரு அரசுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 08th April 2022 12:49 AM | Last Updated : 08th April 2022 12:49 AM | அ+அ அ- |

விபத்து இழப்பீடு தராததால் மேலும் ஒரு அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளா்கள் ஜப்தி செய்தனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சோ்ந்தவா் அந்தோணிமுத்து (68). கிறிஸ்தவ மத போதகரான இவா் கடந்த 2013 ஜன. 5 ஆம் தேதி எடமலைப்பட்டிபுதூா் பிரிவுச் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி படுகாயமடைந்து, சிகிச்சைக்குப் பின் உயிா் பிழைத்தாா். இதையடுத்து தனக்கு இழப்பீடு கேட்டு திருச்சி மோட்டாா் வாகன சிறப்பு நீதிமன்றத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்டம் மனுதாரருக்கு ரூ. 7 லட்சத்து 87 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி தங்கமணி உத்தரவிட்டாா். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வட்டியுடன் சோ்த்து ரூ. 12 லட்சத்து 92 ஆயிரத்து 123 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் உரிய காலத்தில் வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா்.
இதன்பேரில் வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் மத்திய பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை சென்று, அங்கு நின்றிருந்த மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்து கழக பேருந்தை ஜப்தி செய்து திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.